9/10/2013

| |

'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடமாகாண சபையிடம் ஒப்படைப்பு



ஐ.நா. சபையோ தமிழ்க் கூட்டமைப்போ தேர்தல் நடத்தும் முடிவை எடுக்கவில்லை
வட மாகாண தேர்தல் நடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதியே எடுத்தார்
யாழ். வட்டுக்கோட்டையில் அமைச்சர் பசில் அறிவிப்பு
வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமோ, தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எடுக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை எடுத்தார்.
அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுள்ள வடபகுதி மக்கள் தங்களைத் தாங்களே ஜனநாயக அடிப்படையில் நல்லாட்சி செய்து வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான தங்கள் பிரதிநிதிகளை எதிர்வரும் 21ம் திகதியன்று தெரிவு செய்து வடமாகாண சபையை பதவியில் அமர்த்த வேண்டும்.
அதையடுத்து தான் முன்னெடுத்துச் சென்ற வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்ட பணிகளை நிறுத்தி, அந்தப் பொறுப்பை வடபகுதி மக்களிடம் நான் 22ம் திகதியன்று ஒப்படைப்பேன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ யாழ். வட்டுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தவராவார். வட்டுக்கோட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2013ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதியன்று முதல் தடவையாக நடைபெறும் வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் தான் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தை கையாள்வதை நிறுத்தப் போகிறேன் என்று குறிப்பிட் டுள்ளார்.
வட்டுக்கோட்டை தொகுதியின் வலிகாமம் மேற்கு பகுதியில் இருக்கும் சித்தன்கேணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் அரசியல் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட்டுக்கோட்டை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்து நான் இம்மாதம் 22ம் திகதிக்கு பின்னர் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்ட பணிகளை நிறுத்தப் போகிறேன் என்று அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
ஆயினும் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி பணிகளை வட பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நன்மையடைக்கூடிய வகையில் புதிதாக தெரிவு செய்யப்படும் வடமாகாணசபை பொறுப்பேற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டு மென்பதே எனது விருப்பமாகுமென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்படும் வடமாகாணசபை இந்த நற்பணியை சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்த அமைச்சர், ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குவது மக்களுக்காக மக்களே தங்களை ஆள வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுதந்திர இலங்கையில் வடபகுதி மக்கள் முதல் தடவையாக தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்களின் விருப்பத்துடன் மக்களுக்கு பணியாற்றும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்று கூறினார்.
எனவே, செப்டம்பர் மாதம் 21ம் திகதியன்று மக்கள் ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும். தங்கள் பிரதிநிதிகளை மாகாணசபைக்கு தெரிவு செய்து அவர்களின் சுய ஆட்சியின் மூலம் தாங்கள் சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கும் அதே வேளையில் அபிவிருத்தியையும் மேற்கொள்வதா அல்லது மீண்டும் இருள்சூழ்ந்த வேதனைக்குரிய மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வளங்களற்ற சுய ஆட்சியை விரும்புகிறார்களா என்று முடிவெடுக்க வேண்டுமென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து மக்களுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களை அதிகார பீடத்தில் அமர்த்தினால் வடமாகாணத்தை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் நிதியையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் பணத்தையும் பயன்படுத்தி வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், இன்று தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பினர் எதையும் செய்வதற்கு பணமில்லாத நிலையில் இருக்கிறனர் என்று கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு பணி செய்வதற்காக தங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று கேட்கவில்லை. உள்ளூராட்சி மன்ற, மாகாணசபை மட்டத்தில் அரசாங்க இயந்திரம் தமிழர் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே தங்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கேட்கிறது
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் இந்த அபிலாசை நடைமுறையில் சாத்தியமானால் வடபகுதி மக்கள் மனித உரிமைகளில் ஒன்றான பொருளாதார சுதந்திரத்தை இழந்துவிடுவார்கள் என்றும் கூறினார்.
எனவே, வடமாகாண மக்கள் மதிநுட்பத்துடன் சிந்தித்து செப்டம்பர் மாதம் 21ம் திகதி தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளுக்கு வாக்களித்து அவர்களை அதிகாரத்தில் அமர்த்தி அதன் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.