8/28/2013

| |

அங்கஜன் சுட்டாரா?அங்கஜனை சுட்டார்களா?முரண்படும் தகவல்கள்

*யாழ் சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று மாலை 19.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆழும் கட்சி ஆதரவாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேற்படி துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக உள்ள அங்கஜனின் தந்தை இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் குமரசர்வானந்தாவின் ஆதரவாளர் எனத் தெரியவருகின்றது. 


குமரசர்வானந்தா முன்னாள் எம்பி மகேஸ்வரன் மற்றம் அவரது மனைவி விஜயகலா ஆகியயோருக்கு சாரதியாக கடமை புரிந்தவர். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக சாவக்சேரி நகர சபைக்கு தெரிவாகியிருந்தார். தற்போது ஆழும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள இவருக்கும் அங்கஜனுக்குமிடையே ஏற்பட்டுள்ள விருப்பு வாக்கு போட்டியே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் எனத் தெரியவருகின்றது:


*யாழ்.குடா நாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியதில், வடக்கின் மேர்வின் சில்வா என வர்ணிக்கப்படும் அங்கஜனின் தந்தை இராமநாதன், சக வேட்பாளரின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பிரதேசத்தில் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட சர்வானந்த் என்ற வேட்பாளரின் அலுவலகத்திற்கு முன்பாக, அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் சுமார் 7 பேர் வாகனங்களில் வந்திறங்கியிருக்கின்றனர். இறங்கியது மட்டுமல்லாமல் குறித்த வேட்பாளரின் பெயரை கூறி ஏளனமாக பேசியுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த கொடிகாமம் பொலிஸாரும், அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் சர்வானந்தின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து என்ன பிரச்சினை? எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? என கேட்டவுடன் அங்கஜனின் தந்தை இராமநாதன் வழக்கம்போல், தனது கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் சர்வானந்த் என்பரின் ஆதரவாளர் சிறி என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை முடித்துக் கொண்டு இராமநாதன் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவரை பிடிக்க முயன்ற சர்வானந்தின் ஆதரவாளர்கள் மீது கொடிகாமம் பொலிஸார் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்ற பகுதி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். எனினும் சர்வானந்தின் ஆட்களே தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கஜன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சாவகச்சேரி நகரப்பகுதி, மற்றும் கைதடி பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பிடமும் துப்பாக்கியும், அதனை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமையும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.