தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என கட்சி பதிவு இல்லை.தலைமையகம் இல்லை. தலைவர்,செயலாளர்,பொருளாளர் இல்லவேயில்லை.இந்த நிலையில்.கட்சியின் பெயரில் மேற்கத்திய இராஜதந்திர உளவு முகவர்கள் கொடுக்கின்ற கோடிகள் ஒரு புறம்.புலம்பெயர் தமிழர்களிடம் செய்கின்ற பணவசூல் மறுபுறமுமாக பெருந்தலைகள் மட்டும் சொந்த வங்கி கணக்குகளின் சுருட்டி கொள்கின்ற உண்மைகள் கசிய தொடங்கியுள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறித்து வடபகுதி மக்களும், தமிழ்க் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் கனடா சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு இதுவரை என்ன நடந்தது எனத் தெரியாத நிலையில் இவ்வருடமும் இவர்கள் அங்கு நிதி சேகரிக்கச் சென்றிருப்பது வடக்கில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி நடவடி க்கைகள் எதனையும் கூறாது மூடிமறைத்து இங்கு மக்கள் கஷ்டப்படுவதாகக் கூறி சேகரிக்கப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து ஒரு சதம் கூட தமிழ் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை எனவும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் சிலரால் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் எண்பது இலட்ச ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பணம் மாவை சேனாதிராஜா எம்.பி.யின் பெயரிலேயே வைப்பிலிடப் பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.