8/22/2013

| |

லயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள்

* தொழிலாளர்களின் சகல பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்

மலையக சமூகத்தினர் மத்தியில் ஜனாதிபதி உறுதி

லயன் காம்பரா யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து மலையக மக்களுக்கு சொந்த விடுகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ய அவர்கள் தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று திரண்டிருந்த பல்லாயிரக்கணக் கான பெருந்தோட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சிக்கல்கள் அனைத்துக்கும் விரைவான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் மூவாயி ரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வைபவமொன்று நடைபெற்றது. அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர் காமினி லொக்குகே, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், பாராளுமன்ற உறுப்பினர்கள் பி. திகாம்பரம், டி.
இராஜதுரை மத் திய மாகாணத்தில் வெற்றிலைச் சின் னத்தில் போட்டியிடும் தமிழரான மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி, மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-
கண்டி ஜனாதிபதி மாளிகையில் பெருந்தோட்டத்துறை மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கண்டி மாவட்ட மக்கள் நாட்டுக்குச் செய்யும் சேவையை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். தோட்ட மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். மலையக மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை நிறுவியுள்ளோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்திலேயே தோட்ட மக்களுக்கென தனியான அமைச்சொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் மலையகப் பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நாமே பெருமளவு ஆசிரிய நியமனங்களை வழங்கினோம். எனினும் ஒரு சிலர் அவற்றைத் தாமே செய்ததாக தம்பட்டம் அடித்துத் திரிகின்றனர். பொய் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
ஜனவசம தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி பிரச்சினை தொடர் பிரச்சினையாக உள்ளது. அதனை நான் கனத்திற் கொண்டுள்ளேன். விரைவில் அதனைப் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். இக்காலங்களில் பல அரசியல்வாதிகள் வாக்குக்காக தோட்டங்கள் வழியே அலைவதைப் பார்க்க முடிகிறது.
நான் உங்கள் நண்பனாகவும் உறவினராகவும் உள்ளேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன். பன்வில கல்பீலி தோட்டப் பிரச்சினை எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நான் அங்கு சென்று நேரில் பார்த்தேன். அத்துடன் மேலும் மூன்று தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்த தோட்டங்களை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்ட நிர்வாகங்கள் இனிமேல் முறையாக இயங்கும் என்பதை நான் மக்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். தோட்ட மக்கள் பல்லாண்டு காலமாக லயன் காம்பராக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனியான குடியிருப்புகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். ஏனைய கிராமங்களைப் போல தோட்ட மக்களுக்கும் வசதியாக வாழக்கூடிய வீடுகள் தோட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்.
குடும்பத் தலைவர்களின் குடிப் பழக்கம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக தோட்டத்துறைப் பெண்களிடமிருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. குடியை நிறுத்தினால் தோட்ட மக்களும் முன்னேற முடியும் என்றார்.