தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி சிவகுரு நாதன் மறைந்து இன்றுடன் பத்தாண்டுகள் ஆகின்றன. 1931ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ம் திகதி பிறந்தவர் 08.08.2003ல் கொழும்பில் மறைந்தார். ஆர். சிவகுருநாதன் தினகரனில் சுமார் 34 வருடங்கள் பிரதம ஆசிரியராக பணிபுரிந்தவர்.
1956ல் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்த இவர், 1959 ல் செய்தி ஆசிரியரானார். அப்பொழுது பேராசிரியர் க. கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்தார். 1961ல் பேராசிரியர் கைலாசபதி பல்கலைக் கழகத்திற்கு விரிவுரையாளராகச் சென்ற பின்னர் இவர் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
இவர் 1961 முதல் 1995 வரை தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக விளங்கினார். பத்திரிகை பணியோடு பல்வேறு சமூக, சமய அமைப்புக்களில் தலைமைப் பதவி ஏற்று கலை, தமிழ்மொழி, இலக்கியம், பத்திரிகை போன்றவற்றின் ஊடாக சமூகப் பணி புரிந்தார். ஒரு பத்திரிகை ஆசிரியராக இனங்களுக்கிடையே சுமுக உறவைப் பேணுவதில் முன்னின்று உழைத்தவர்.
ஒரு தினசரி செய்திப் பத்திரிகை மூலம் எவ்வாறு இலக்கியப் பணிபுரிய முடியும் என்பதனை வெளிக் கொணர் ந்தவர். யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த இவர், யாழ். இந்துக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
1950 களில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்கும் போது தமிழ்ச் சங்க செயலாளராக தனது தமிழ்ப் பணியை ஆரம்பித்தவர். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க இதழான 'இளங்கதிர்' சஞ்சிகையின் ஆசிரியராகவும், இந்து மாணவர் சங்கத்தின் இதழான 'இந்து தர்மம்' சஞ்சிகையின் ஆசிரிய ராகவும் விளங்கினார். பல்கலைக்கழக மாணவ காலத்துள் ஒருவர் இரண்டு இதழ்களில் ஆசிரியராக இருப்பது மிகவும் அருமை. இந்த பெருமையை சிவகுருநாதன் பெற்று திகழ்ந்து தமிழ் மொழிக்கும், இந்து சமயத்திற்கும் தொண்டு செய்தவர்.
அமரர் சிவகுருநாதன் ஒரு நல்ல நடிகரும் ஆவார். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் 'உடையார் மிடுக்கு' - 1953 'தவறான எண்ணம்' - 1964 ஆகிய நாடங்களில் நடித்துள்ளார். கலாசூரி சிவகுருநாதன் கொழும்பின் புலமைத் திறன்மிக்க தமிழ்ச் சட்டத்தரணிகளுள் ஒருவராக விளங் கினார். 1973ம் ஆண்டு சட்டத்தரணியான இவர் சட்டக்கல்லூரியின் தமிழ் வழி விரிவுரையாளர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
இதழியல் துறை கற்கை நெறியாகக் கொள்ளப்படும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்வழி போதனையில் இவர் பணி முக்கியமானது. இலங்கைப் பத்திரிகைச் சபை நடத்திய இதழியல் வகுப்புகளுக்கும் இவர் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். கொழும்பில் பல்வேறு அமைப்புக்க ளில் பல முக்கிய பதவிகளை அலங் கரித்தவர். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரசுர வெளியீடுகளுக்கான குழுவின் தலைவராகவும், இலங்கை கலைக்கழக த்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவருக்கு இதழியல் துறை, சட்டத்துறை ஆகியவற்றிலிருந்த திறமை காரணமாக பல பதவிகள் கிடைத்தன. அவற்றுள் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் (Working Journalist Association ) தலைவராக இரண்டு தடவைகள் பதவி வகித்தது முக்கியமானதாகும். கலைச் சொல்லாக்க மீள் நோக்குக் குழு இவரை இரண்டு துறைகளுக்கும் நிபுணத்துவ ஆலோசகராக நியமித் திருந்தது.
தினகரன் பத்திரிகை ஆசிரியராக சிவகுருநாதன் ஈட்டிய பெருஞ் சாதனை, எழுத்தாளர்கள் பலரை வளர்த்தெடுத்தமையாகும். சிவகுருநாதனை தத்தமது பிரதம வழிகாட்டியாக கொண்டாடும் தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள் பலர் உள்ளனர். "சிவகுருநாதனுக்குள் என்றும் தேடல் தணியாத ஓர் ஆய்வு மாணவன் இருந்து கொண்டே இருந்தான். அந்த தேடல் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இலங்கையில் புதினப்பத்திரிகைகளின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வை முதுமா ணிப் பட்டத்துக்காக செய்தார்.
1983 ஆடிக்கலவரத்தின் பொழுது ஆய்வுக் கட்டுரையை அக்கினி கபZகரம் செய்து விட்டது. இருந்தும் தனது ஆர்வம் காரணமாக ஆய்வுக் கட்டுரையை மீட்டெழுதி 1985ல் M.A பட்டம் பெற்றர். டாக்டர் பட்டத்துக்கான (Ph.D) ஆய்வை மேற்கொள்ள விரும்பினார். சிவகுருநாதனின் இச்சேவைக்கான கணிப்பாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று இவருக்கு 'முதுபெரும் இதழாசிரியர்' என்ற விருதினை வழங்கி கெளரவித்தது.
பத்திரிகையாளர் சிவகுருநாதனுக்கு கிடைத்த சமூக ஏற்புக் கெளரவங்களில் மிக முக்கியமானது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பதவியாகும்" என பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டார். 1950 களில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்கும் போது தமிழ்ச் சங்க செயலாளராக தனது தமிழ்ப் பணியை ஆரம்பித்தவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.