8/28/2013

| |

சிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எச்சரிக்கை

பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்துமென கவலை
சிரியா மீதான இராணுவத் தலையீடு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் சீனாவும் ரஷ்யாவும் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான ஒரு தலையீடு பிராந்தியத்திலேயே பேரழிவுச் சூழலை ஏற்படுத்தும் என ரஷ்யா குறிப் பிட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மறுபுறத்தில் ஐ. நா. வின் இரசாயன ஆயுதம் தொடர்பான நிபுணர் குழு தாக்குதல் இடம்பெற்ற டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டது. இங்கு பயணம் மேற்கொள்ளும் போது ஐ. நா. குழுவின் வாகனம் மீது நேற்று முன்தி னம் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது எதிர்பாராத இராணுவ நடவடிக்கை தொடர்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிரிய சர்ச்சை தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டும் முகமாக டேவிட் கெமரூன் நேற்று முன்தினம் தனது விடுமுறையை ரத்துச் செய்து திரும்பியுள்ளார்.
ஆனால் சிரியா விவகாரத்தில் சர்வதேச சமூகம் சர்வதேச சட்டத்தை மதித்து முன் யோசனையுடன் செயற்படுமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அலக்சாண்டர் லுகஷ்விக் எச்சரித்துள்ளார்.
“பாதுகாப்புச் சபையை மீறி மீண்டும் ஒருமுறை குறுக்குவழியில் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தும் செயற்கையான கள நிலவரத்தை உருவாக்கி சிரியாவில் மேலும் மோசமான நிலை ஏற்படுத்தப்படவுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா என பிராந்தியத்திலேயே பேரழிவு சூழலை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்தார்.
சிரிய விவகாரம் குறித்த ரஷ்யாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தையை அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஒத்திவைத்தது. தற்போதைய இரசாயன தாக்குதல் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவதாலேயே இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் முடிவுக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. சிரியா பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு காண்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்று புதன்கிழமை ஹேகில் கூடி பேச்சு வார்த்தை நடத்த, முன்னர் திட்டமிட்டிருந்தது. சிரியா விவாகரத்தில் துருப்புக்களை காட்டி அச்சுறுத்துவதை விட நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது பயன்தரக்கூடியதாக இருக்கும் என ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கென்டி கட்டிலே அறிவுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கெமரூன் குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீன அரச செய்திச் சேவையான ஷின்ஹோ குறிப்பிடுகையில், ஐ. நா. நிபுணர் குழு சிரியாவில் தனது சோதனையை முடிக்கும் முன்னரே மேற்கு சக்திகள் யார் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது என முடிவு காண முயற்சிக்கிறது என குற்றம் சாட்டி இருந்தது.
ஐ. நா. விஜயம்
கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குதல் குறித்து சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மருத்துவ நலன்புரி அமைப்பான எம். எஸ். எப். என்ற அமைப்பு, டமஸ்கஸின் மூன்று மருத்துவமனைகளில் இரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நரம்பு வழி நச்சு தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 3,600 பேரளவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 355 பேர் மரணமடைந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
என்றாலும் இந்தத் தாக்குலுக்கு சிரிய அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு சிறிதளவான சந்தேகமே இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இரசாயன தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் மேற்கு மாவட்டமான முவதமியாவில் ஐ. நா. நிபுணர்கள் நேற்று முன்தினம் சுமார் மூன்று மணிநேரம் கழித்தனர். இதன் போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் மருத்துவர்களை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதில் ஒருசில மாதிரிகளும் சேகரிக்கப்பட்டதாக ஐ. நா. பேச்சாளர் ஒருவர் தகவலளித்தார்.
எனினும் இந்த விசாரணைகளை நடத்த பயணமாகும் போது ஐ. நா. நிபுணர் குழுவின் வாகனங்கள் மீது இனந் தெரியாதோர் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தினர். இதனால் தனது பயணத்தை சற்று நேரம் நிறுத்திக்கொண்ட குழு மீண்டும் திட்டமிட்டபடி பயணத்தை ஆரம்பித்தது.
இந்த ஸ்னைப்பர் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவிடம் ஐ. நா. குழுவை அறிவுறுத்தினார்.
சிரிய இரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா தரப்பில் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை. ஆனால் இது ஒரு தார்மீகமற்ற செயல் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஐ. நா. குழுவுக்கு சம்பவம் இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்ய அனுமதி அளிக்க தாமதித்தன் மூலம் சிரிய அரசுக்கு இந்த விடயத்தில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என கெர்ரி சந்தேகம் வெளியிட்டார். “சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்றது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனை எந்த முறையிலும் நியாயப்படுத்த முடியாது. உலகில் கெளரவமான மக்கள் மீது உலகில் மிக கொடூரமான ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இருக்கிறது என ஜனாதிபதி ஒபாமா உறுதியாக நம்புகிறார்” என்று கெர்ரி குறிப்பிட்டார்.
சிரிய பதற்றத்தையொட்டி வொஷிங்டன் தனது யுத்த கப்பலை கிழக்கு மத்திய தரை கடலில் தரித்து வைத்திருப்பதோடு இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் இராணுவ தலைமைகள் ஜார்தானில் கூடி ஆலோசித்தன.
இந்நிலையில் சிரிய இராணுவ தளங்களை இலக்குவைத்து அமெரிக்க கடலினூடே எவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த இரசாயன தாக்குதலை சிரிய அரசு நடத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கை லவ்ரொவ் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் ஐ. நா. அனுமதி இன்றி இராணுவ நடவடிக்கை எடுப்பது சர்வதேச சட்டத்தை மோசமாக மீறும் செயல் என லவ்ரொவ் எச்சரித்தார்.
சிரியா மீது இராணுவ தலையீட்டுக்கு பாதுகாப்புச் சபையில் அதன் நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாரிய மனிதாபிமான தேவைக்காக ஐ. நா. வை மீறி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரிட்டனும் பிரான்ஸ¤ம் எசச்ரித்துள்ளன.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் டொனி பிளாயர் தி டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதிய பத்தி ஒன்றில், சிரியா மற்றும் எகிப்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு மேற்கு நாடுகள் ஆதரவளிக்காவிட்டால் மத்திய கிழக்கு பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என விபரித்திருந்தார்.
ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக இதுவரை 100,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பதாக ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக 1.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக பதிவாகியுள்ளனர்.