8/04/2013

| |

அக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விபுலானந்தர் சிலை உடைக்கப்பட்டதா?

அக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் சுவாமி விபுலானந்தர் சிலை உடைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை எனவும் இது பிரதேசத்தின் இன உறவைச் சீர்குழைப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் முயற்சியெனவும் பாடசாலை அதிபர் எல். கோபாலபிள்ளை தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில நிறுப்பட்டிருந்த சுவாமி விபுலானந்தர் சிலை இனந்தெரியாதவர்களினால் உடைக்கப்பட்தாகவும் அது தொடர்பில் வெளிவரும் கண்டன அறிக்கைகள் தொடர்பாகவும் உள்ள உண்மை நிலையை அறியும் பொருட்டு, குறித்த பாடசாலையின் அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் விபரித்ததாவது;
பாடசாலையில் நிறுவப்பட்டடிருந்த சுவாமி விபுலானந்தர் சிலையினை அது இருந்த இடத்திலிருந்து பாடசாலையின் வளாகத்தின் பிரிதொரு இடத்துக்கு மாற்றம் செய்யும் போது, இச்சிலையில் சிறு வெடிப்பேற்பட்டது. இவ்வெடிப்புடன் இச்சிலை காணப்பட்டிருந்த வேளை, கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பாடசாலையின் தரம் 9 மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மாணவன் உதைத்த பந்து தற்செயலாக, வெடிப்புட்டிருந்த சிலையில் பட்டதனால் இச் சிலை உடைந்துள்ளது.
இதை நேரில் கண்ட பலர் உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஆசிரியை ஒருவரினால் எனக்குத்  தெரிவிக்கப்பட்து
இதைத் தொடர்ந்து நான் எனது பாடசாலையின் பிரதி அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்குமாறு பணித்தற்கமைய அவர் மாணவர்களிடம் விசாரித்து உண்மை நிலையை அறிந்துள்ளார்.
இந்நிலையில் குறிதத் சம்பவம் நிகழ்ந்த வேளை பாடசாலையில் மத்திஸ்தர் சபை அமர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி சபை என்பவற்றுடன் கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இச்சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டுமென நினைத்துள்ளனர்.
அவ்வாறு நினைத்த ஒரு சிலரினால் செய்தியாளர் ஒருவரினூடாக மாணவர்களின் தற்செயலான செயற்பாட்டினால் உடையும் தருவாயில் இருந்த சிலை உடைந்து போனதை பெரிதுபடுத்தி சிலையை இனந்தெரியாத நபர்கள் உடைத்ததாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளனர்.
உண்மை நிலையை மறைத்து பொய்யான செய்தியை ஒரு சிலர் ஊடகங்களுக்கு வழங்கியிருப்பது மிகவும் வேதனையளி;ப்பதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் தமிழ் – முஸ்லிம் ஆசிரியர்கள் ஒற்றுமையுடன் கற்பித்து வருகின்றனர் இப்பரதேசத்தின் இன ஒற்றுமையை சீர் குழைத்து அதில் குளிர்காய நினைப்பர்களினாலேயே இவ்விடயம் பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளதகவும் மாறாக சுவாமி விபுலானந்தர் சிலையை எந்வொரு இனந்தெரியா நபர்களும் உடைக்க வில்லையெனவும் இச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் உடைந்து போன சிலையை மீளவும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் கோபாலபிள்ளை மேலும் தெரிவித்தார்.