8/06/2013

| |

கோழி கூவி பொழுது விடிவதில்லை! ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.

கோழி கூவி பொழுது விடிவதில்லை! ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.
 ஊடக அறிக்கை!
செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடும் உழைப்பினால் உயர் பாதுகாப்பு வலயங்கள் மீட்கப்பட்டு  வருவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்திருக்கும் கூற்றுக்கு ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் அரசியல் பீடம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,...
எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். இதை இலக்காக கொண்டு, எமது வழிமுறையில் நின்று  எமது மக்களின் நிலங்களை மக்களிடமே மீட்டுக்கொடுப்பதில் நாம் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றோம். இதை கண்டு அச்சப்படுகின்ற கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழுதத்தங்களால்  மக்களின் நிலங்கள் மீட்டப்படவில்லை என்றும்,  நவநீதப்பிள்ளையின் வருகையை ஒட்டி, சர்வதேச சமூகத்திற்கு வெளிக் காட்டு வதற்காகவே மக்களின் நிலங்கள் மீட்கப்படுவதாக ஒரு கதையும்,... தேர்தல் பிரச்சாரத்திற்காகவே நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்று இன்னொரு கதையினையும்,..
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்தரின் அவர்கள்
இரு வேறு கதைகளை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
இந்த இரு வேறு காரணங்கள் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு காரணங்களை கட்டவிழ்த்து விட்டு ஈ.பி.டி.பி க்கும் எமது மக்களின் நில மீட்புக்கும்  சம்பந்தம் இல்லை என்று மக்களுக்கு பொய்யுரைத்து,.. கறையான்கள் கஷ்டப்பட்டு புற்றெடுக்க, கருநாகங்கள் குடி புகுந்த
கதையாக, தமது சொந்த வாழ்விடங்கiளில் மீள் குடியேறி வரும் எமது மக்களின் மகிழ்ச்சிக்கு தாமே காரணம் என்று உரிமை கோர எத்தனிக்கிறது கூட்டமைப்பு. எமது மக்கள் மீள் குடியேறி வருவது கூட்டமைப்புக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருந்திருந்தால், யார் குற்றியும் அரியானால் சரி என்ற 
நல்ல சிந்தனையில் மீள் குயேற்றங்களை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். ஆனாலும், ஈ.பி.டி.பி யின் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் எமது கட்சியின் அர்ப்பணம் மிக்க உழைப்பை கொச்சைப்படுத்த நினைத்த கூட்டமைப்பின் பேச்சாளர் மக்களின் மீள் குடியேற்றம் மகிழ்ச்சி தரும்  விடயம் என்று ஒரு வார்த்தையேனும் ஊடகங்களுக்கு கூறியிருக்கலாம். எமது மக்களின் நிலங்களின் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என்று போலித்தனமாக கோசம் எழுப்பி வரும் கூட்டமைப்பு, படையினர் எமது நிலங்களில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்ற வழமையான
தமது சுயலாப விருப்பங்களையே வெளிப்படுத்தியுள்ளனர். சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு விட்டன என்று எமது மக்களின் அவலங்களை காட்டி அதில் தமது தேர்தல் வெற்றியை பெற்று விடலாம் என்ற சுயலாப அரசியலில் கூட்டமைப்பு வழமைபோல் இறங்கியுள்ளது. ஆனாலும்,... எமது மக்களின் நிலங்களை மீட்டுக்கொடுத்து மக்களின் மகிழ்ச்சியை மட்டுமே எமது அரசியல் இலக்காக கொண்டிருக்கின்றது
ஈ.பி.டி.பி. மக்களின் மகிழ்ச்சியை வைத்து நாமும், மக்களில் அவலங்களை வைத்து கூட்மைப்பும் செயற்பட்டு வருவது எமது மக்களுக்கே வெளிச்சமான விடயம்.  இதில் யார் மக்களின் நண்பர்கள் என்பதை மக்களே தீர்மானிப்பது  என்பது உறுதியாகி விட்டது. 2009 மே 18 இற்கு பின்னர் நாம் தொடர்ச்சியாகவே தேர்தல் நடக்காத சூழ்நிலையில் கூட எமது மக்களின் நிலங்களை மீட்டெடுத்து வந்திருக்கின்றோம். ஆகவே, தேர்தலுக்காகவே நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்பது எமது கட்சியின் மீது கூட்டமைப்பு கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்சி என்ற விடயத்தை வெளிப்படுத்துகிறது.  அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். எமது மக்களின் அவலங்களை தீர்க்க இங்கு யாரும் வரப்போவதில்லை. அப்படி வருவதாக இருந்திருந்தால், எமது மக்கள் முள்ளி வாய்க்கால் வரை அவலங்களை அள்ளி சுமந்து சென்ற போது வெளியுலகம் இங்கு வந்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பின்பே வெளியுலகம் இங்கு வேடிக்கை பார்க்க வந்தது. கூட்டமைப்பின் குரல் கேட்டு வெளியுலகம் இங்கு வந்திருக்கவில்லை.
அவ்வாறு வெளியுலகம் வரவேண்டும் என்று கூட்டமைப்பு விரும்பி குரல் கொடுத்திருக்கவும் இல்லை. அப்போது 22 நாடாளுமன்ற உறுப்புரிமைகளை கொண்டிருந்த கூடட்டமைப்பு தமது நாடாளுமன்ற உறுப்புரிமைகளை ராஐpனாமா செய்து தமது எதிர்ப்பை காட்டியிருந்தாலும் வெளியுலகம் இங்கு வந்திருக்க போவதில்லை.
அவ்வாறு தமது நாடாளுமன்ற சுக போகங்களை துறந்து எமது மக்களை  காப்பாற்ற கூட்டமைப்பு விரும்பியிருக்கவும் இல்லை. ஆகவே, வெளியுலக அழுத்தங்களுக்கு அஞ்சியே மீள் குடியேற்றங்கள்  இங்கு நடப்பதாக கூட்டமைப்பு கூறுவதில் உண்மையும் இல்லை. கோழி கூவி பொழுது விடிந்ததாக சொல்வது போல் தாம் கூறியே எதுவும் இங்கு நடப்தாக கூட்டமைப்பு கூறுவது வெறும் தேர்தல் பிரச்சாரமே.  நாம் சொல்வதை செய்து வருகிறோம், செய்வதையே சொல்லியும்  வருகிறோம்.  வட தேச விடி வெள்ளியாக திகழப்போகும் வடக்கு மாகாண சபையின் அரசியல் அதிகாரங்களை மக்கள் எமக்கு பெற்றுக்கொடுத்து எமக்கு ஆணை
வழங்கும் போது,... அதன் மூலம் அரசியல் பேரம் பேசும் சக்தியை எமது மக்கள் எமக்கு  வழங்கும் போது,... இழந்து போன எமது மக்களின் அனைத்து நிலங்களையும் நாம் எமது மக்களுக்கே மீட்டுக்கொடுப்போம். எமது அரசியல் பலத்தை வைத்தும், எமது இணக்க அரசியல் வழி முறை மூலமும் ஐனாதிபதி அவர்களையே இணங்க வைத்து எமது மக்களை பலாலி வரை கொண்டு சென்று நாம் குடியேற்றுவோம். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் அரசியல் பீடம் விடுத்திருக்கும் அந்த அறிக்கையில், போலியான எதிர்ப்பு அரசியல் ஒரு சாண் நிலத்தை கூட எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கவில்லை என்றும், நிலங்களை மீட்பது மட்டுமன்றி எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கும் எமது ஆக்க பூர்வ இணக்க அரசியலே வரலாற்று சாதனைகளை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி