8/25/2013

| |

கூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வானம் ஏறி வைகுண்டம் போக நினைக்கின்றனர்

உள்ளூராட்சி சபைகளில் தடுமாறுபவர்களுக்கு மாகாண சபை வேண்டுமாம் - டக்ளஸ் கிண்டல்
மாகாண சபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால் நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டிருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களுக்காக நாம் சுமக்கும் பாரம் அதிகம். ஆனாலும் செல்ல வேண்டிய இலக்கின் தூரம் அதிகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
நாம் நடந்து வந்த பாதையில், கடந்து வந்த சவால்களுக்கு மத்தியிலும், உங்களை விட்டு எங்கும் விலகி ஓடி விடாமல், உங்களுடனேயே இருந்து வந்திருக்கிறோம். உங்களை உசுப்பேற்றி அவலங்களை உங்கள் மீது சுமத்தி விட்டு ஓடிப்போனவர்கள், இன்றைய சுமுகமான சூழ்நிலையிலும் தேர்தல் காலங்களிலும் மட்டுமே உங்களிடம் வந்து நிற்பார்கள். நீங்கள் அவலப்படும் போது அவர்கள் இங்கு வந்து நிற்கவில்லை. உங்களது துயர்களை துடைக்கவும் இல்லை.
நாம் சாதித்தவைகளில் சிறு துளியை கூட தேர்தலுக்காக மட்டும் தமிழ் தேசியம் பேசி, போலியான எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எவரும் இங்கு செய்திருக்கவில்லை. மாகாண சபை உரிமைகளை அருவருப்பாக அணுகியவர்கள் தேர்தல் என்றவுடன் பதவி நாற்காலிகளுக்காக தேடி வந்திருக்கிறார்கள்.
அரைகுறை தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும் கூறி இதுவரை கிடைத்த அனைத்து தீர்வுகளையும் ஒதுக்கி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வலிகளை உங்கள் மீது சுமக்க வைத்தார்கள். சுயாட்சியை நோக்கி நீங்கள் செல்லும் வழிகளை தோற்கடித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்த உள்ளூராட்சி சபைகள் செயலிழந்து சோர்ந்து கிடக்கின்றன. உள்ளூராட்சி சபைகளையே நடத்த முடியாமல் திண்டாடுபவர்கள் மாகாண சபையை எப்படி எமது மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு நடத்தப்போகிறார்கள்? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனவு இருக்கின்றது. நாம் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகள் மட்டுமே அதிக நிதி வளங்களோடு அபிவிருத்தியை நோக்கி செயற்பட்டு வருகின்றன.
இதற்கு காரணம் நாம் எமது மக்களின் பிரதிநிதிகளாக இருந்து உரிமைக்கு குரல் கொடுத்து, அரசாங்கத்தின் உறவுக்கு கரம் கொடுத்து வருகின்ற எமது ஆக்கபூர்வ இணக்க வழிமுறையே ஆகும் என்றார்.