8/26/2013

| |

ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளை, தனது இலங்கை விஜயம் பற்றி கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை இலங்கை சென்றடைந்துள்ளார்.
நவி பிள்ளையுடன் மேலும் நான்கு ஐநா பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர்.ஒருவார காலத்துக்கு இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளார்.
முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் நவி பிள்ளை சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நடந்துள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்க இலங்கை தவறியுள்ளதாக ள் சர்வதேச மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், நவி பிள்ளை இலங்கை சென்றுள்ளார்.
தனது விஜயத்தின் முடிவில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நவி பிள்ளை அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி தரப்பை சந்திப்பார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ்,சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் சந்தித்துப் பேசுவார்.
போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் காலப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆனால், இந்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது விசாரணை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை முழுமையான விசாரணைகளை நடத்த முன்வராவிட்டால், எதிர்வரும் நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துவந்துள்ளன.