மட்டக்களப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் நிர்மாண வேலைகள் நடைபெற்றுவரும் மட்டக்களப்பு வெபர் மைதான வேலைகளை பார்வையிட்டார்.
இதன் போது, முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ்.சிவநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.
முதலமைச்சர் வேலைகளைப் பார்வையிட்டதுடன், தற்போதைய நிலைமை குறித்தும் அவற்றினை விரைவு படுத்துதல் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் ரூபா 150 மில்லியன் செலவில், நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையா ட்டு அரங்காக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட்டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.
வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை கடந்த வருடம் ஜனாதிபதி ஆரம்பித்து வைத் ததுடன், இதற்கான அடிக்கல்லினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ வி.முரளிதரன் நட்டு வைத்திருந்தார்.
யேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மிஷன் கோயில் மற்றும் வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலமாகக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில் சேமக்காலையாக இருந்த இடத்தினை 1960 களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தினை உருவாக்கினார் என்பது வரலாறாகும்.