மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமைகளை ஏனைய மாகாண சபைகள் உச்சளவில் பயன்படுத்தியிருக்கின்றன. ஆனால் எமது மாகாண சபை அப்படியல்ல. இப்போது இல்லாமல் செய்வதற்கு ஒரு தரப்பும், தலை, வாலை அறுக்க இன்னொரு தரப்பும் முயன்று வருகின்றன என கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் சுற்றுலா விடுதியில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எந்த ஒரு விடயமுமே புதிதாக ஆரம்பிக்கப்படும் பேது பெரிளயவான சவால்களைச் சந்திக்கவேண்டி வரும் அந்த வகையில் கிழக்கு மாகாண சபையும், கடந்த 2008ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்படும் போது மக்கள் ஆட்சிக்குள் கொண்டு வருவதற்காக, பல்வேறு சவால்களை முன்னாள் முதலமைச்சர் எதிர் கொண்டிருந்தார்.
அதில் ஒன்றுதான் இந்தப் பாலர் பாடசாலைப் பணியகமாகும். இதன் உருவாக்கத்தின் போது பல சவால்கள் காத்திருந்தன. அவை சரி செய்யப்பட்ட போதும் இப்போதைய முதலமைச்சரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்பாலர் பாடசாலைப் பணியகம் 1800ககும் அதிகமான பாடசாலைகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் சம்பளப்பிரச்சினையே இப்போது பெரிய பிரச்சினையாகும். ஆனால் யுத்தம் நடைபெற்ற காலம் முதல் அர்பணிப்புடன் பணியாற்றி வரும் உங்களுக்கு ஆணடவனின் ஆசீர்வாதம் இருக்கும்.
இப்போதுள்ள நெருக்கடி நிலை அப்படியல்ல. 100 வீதம் முஸ்லிம்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு தமிழர் சென்றால் அங்கு உள்ள மௌலவியிடமே ஏதாவது உதவி தேவையென்றால் கேட்பார்.அதே போன்று சிங்களப்பிரதேசத்திற்குச் சென்றார். பௌத்த பிக்குவிடமே உதவி கேட்பார். அந்த வகையில் சமாதானத்தை ஏற்படுத்துபவர்களாக மதத்தலைவர்கள் இருக்க வேண்டும்.
எல்லா மக்களுக்கும் சொந்தமான நாடு. தமது மதக் கடமைகளை தமது மதத்தலத்திலே செய்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். மதங்கள் இன ஒற்றுமை, சமாதானம், சாந்தியை ஏற்படுத்துபவையாக இரக்க வேண்டும். அது இந்த நாட்டில் இல்லாமல் போயுள்ளது.
ஒரு மதத்திலுள்ளவர்களை மற்றைய மதத்தவர்கள் அடித்தால் தண்டனையுண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை ஆண்டவன் ஏற்றுக் கொள்வான் என குர்ஆன் சொல்கிறது. அதில் இஸ்லாம் என்று சொல்லவில்லை. எல்லா மதத்தவருக்கும் அது பொதுவானது.
நாங்கள் எமது நாட்டில் மூன்று இனங்கள் வாழுகிறோம் என்ற வகையில் அடுத்தவரை மதித்து, சமாதான மாக வாழவேண்டிவர்கள் என்ற வகையில் மற்றையவர்களை மதிக்கின்றவர்களாக வாழவேண்டும் என்றார்.