எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மோதல்கள் காரணமாக சுமார் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார்.
அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன.
போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாய் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி கூறுகிறது.
ஆனால் கெய்ரோவிலும் நாட்டின் பிற பகுதிகளிலுமாக 95 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு கூறுகிறது.
அரசின் இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினர் இருவர் கொல்லப்பட்டதாகவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வன்செயல்களை அடுத்து இடைக்கால அரசில் துணை அதிபரகா இருக்கும் முஹமட் எல் பராதேய் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
நாடு முழுவதும் அவசரநிலை; முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு
இதேவேளை, எகிப்து அதிபர் அலுவலகம் ஒருமாத காலத்திற்கு நாடளாவிய ரீதியில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. தலைநகர் உட்பட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோதல்களும் எதிர்ப்புகளும் பரவிவரும் நிலையில் நாட்டின் அரச தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெக்ஷாண்டிரியாவுக்கான வீதிகளை மறித்து மோர்ஸி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கெய்ரோவுக்கு தெற்காக ஃபாயோம் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாகவும் சுவேஸ் நகரில் அரச கட்டமொன்றை தாக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
இன்னும் பல நகரங்களிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.