வட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட்இ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனையடுத்து பத்மநாபா ஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவியாரான திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
இதன்மூலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆரம்பகாலம் முதல் முக்கிய உறுப்பினராகவிருந்த திருமதி ஞானசக்தி (ஞானா) அவர்களை ஈ.பி.டி.பியின் பக்கம் தள்ளிவிடுவதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி வெற்றி கண்டுள்ளது.
சுரேஷ் அணியின் விடாப்பிடியான போக்கே இந்நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தது என யாழ் குடாநாட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லையென்பதே அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்பதற்கான காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி தெரிவித்திருந்தது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவமில்லாத யாரையும் கூட்டமைப்பின் வேட்பாளராக இணைத்துக் கொள்ள முடியாது என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி குறிப்பிட்டிருந்தது.
ஆனால் வட மாகாணசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சீ.வீ. விக்கினேஸ்வரன் எந்தக் கட்சியையும் சாராதஇ அரசியல் சாராத தனிநபர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.