இளைஞர் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் குருநாகலில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமாகிய சி.சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜே.கலாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்று 5 ஆம் திகதி வருகை தந்த மேற்படி 50 இளைஞர் யுவதிகளும் புதுக்குடியிருப்பில் உள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் தங்க உள்ள இவர்கள் மட்டக்களப்பில் உள்ள 50 இளைஞர் யுவதிகளுடன் சென்று அனைத்து விடயங்களையும் பார்வையிட உள்ளனர்.
இதன்போது, இவர்கள் மட்டக்களப்பு மக்களின் கலாசாரம், பாரம்பரியங்கள், மொழி பழக்க வழக்கங்கள் என்பனவற்றை அறிந்துகொள்வதுடன் மட்டக்களப்பின் புராதன இடங்களையும் பார்வையிட உள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் இருந்து 50 இளைஞர் யுவதிகள் இம்மாத இறுதியில் குருனாகலுக்குச் சென்று இதே இளைஞர் யுவதிகளுடன் அவர்களது வீடுகளில் இருந்து அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது பண்பாடுகளையும் அறிந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.