7/04/2013

| |

1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தியசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினைக்கொண்ட வைத்தியசாலைக்கு செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலையில் நோயாளர் விடுதிக்கான அடிக்கல் நடப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இதற்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.முகம்மது மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரின் இணைப்பாளருமான பூ.பிரசாந்தன்,மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி ஞானகுணாளன்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம்,சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக அபிவிருத்திசெய்யப்படாமல் இருந்த இந்த வைத்தியசாலைக்கு முதன்முறையாக இரண்டு மாடிகளைக்கொண்ட நோயாளர் விடுதி அமைக்கப்படவுள்ளது.
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிக்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1906ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை முன்னைய காலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வைத்தியசாலையாக இருந்ததாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் தெரிவித்தார்.
கல்லடி பாலம் அமைக்காத காலப்பகுதியில் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்துகள் கிட்டங்கி பாலம் ஊடாக இடம்பெற்றபோது மட்டக்களப்பு மத்திய பகுதியான செட்டிபாளம் அமைந்திருந்ததன் காரணமாக வைத்திசாலை அன்றைய காலத்தில் பிரசித்திபெற்றதாக இருந்ததாக தெரிவித்தார்.அன்றைய நாளில் ஒரு தளவைத்தியசாலை போன்று செயற்பட்டுவந்தது.
வரலாற்று பின்புலத்தைக்கொண்டுள்ள இந்த வைத்தியசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே கடந்த காலத்தில் இயங்கிவந்தது.கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்ச்சூழலும் இதற்கு காரணமாகும்.1991ஆம் ஆண்டு தொடக்கம் இப்பிரதேசம் ஒரு யுத்த நச்சுவலயமாக காணப்பட்டது.இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இந்த நிலையிருந்தது.
இந்த வைத்தியசாலையானது களுதாவளை தொடக்கம் தாழங்குடா வரையிலான பகுதிகளில் உள்ள மக்களுக்கு சேவையாற்றக்கூடியது.இதுசேவை மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த வைத்தியசாலையினை அபிவிருத்திக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சில தடங்கள்களினால் அவை மேற்கொள்ளப்படவில்லை.இதனை அபிவிருத்திசெய்வதில் நான் உட்பட இந்த பிரதேச மக்கள் அக்கரை செலுத்தாததே இந்த நிலைமைக்கு காரணமாகும்.
இதனை கருத்தில் கொண்டு இதனை இனியாவது அபிவிருத்திசெய்யவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.இதன் பௌதீக வளங்கள்,ஆளணிப்பற்றாக்குறை உட்பட அடிப்படை வசதிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முதல் கட்டமாக எடுக்கப்பட்டுள்ளன என்றார்.இதேவேளை
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலைக்கு செட்பாளையம் கண்ணகியம்மன் ஆலயத்தினால் ஒன்றரை ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் கிராமிய வைத்தியசாலை அபிவிருத்திசெய்யப்படவுள்ள நிலையில் தற்போதைய வைத்தியசாலையில் இடவசதியின்மை காரணமாக கண்ணகியம்மன் ஆலய பரிபாலன சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த காணி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காணி உறுதிப்பத்திரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரினால் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.முகம்மது மன்சூரிடம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அமைச்சரினால் அமைச்சின் செயலாளர் அமலநாதனிடம் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.