7/06/2013

| |

திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது

இந்த ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்துவருகி்ன்றன திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதியன்று ஐந்து மாணவர்கள் கொலையுண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில், அக்காலப்பகுதியில் திருகோணமலை பகுதியில் பொலிஸ் பரிசோதகராக (இன்ஸ்பெக்டர்) இருந்து தற்போது உதவி அத்தியட்சகராக (ஏஎஸ்பி) பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரியும் ஒருவர்.
திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை தலைமை நீதவான் யூ.எல்.எம். அஸ்கர் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அநுராதபுரம் சிறைச்சாலை விளக்கமறியலில் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.திருகோணமலை கடற்கரையில் காந்திசிலை அருகே, இந்த ஐந்து மாணவர்களும் 2006-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் கொலையுண்ட ரஜீகரின் தந்தை டாக்டர் மனோகரன் இந்த ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையில் நடந்த மீளாய்வு மாநாட்டில் பேசினார்.
இந்தக் கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ளன.
இந்தக் கொலைகள் அடங்கலாக இன்னும் பல மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு, விசாரணை முழுமை பெறாமலேயே அந்த விசாரணைகளை 2009-ம் ஆண்டில் முடித்துக்கொண்டிருந்தது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி அந்த ஆணைக்குழு பணியை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.