கோறளைப்பற்று தெற்கு கிரான் எனப் பெயரிடப்பட்ட புதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை ஆராய புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் PL/7/5/6/8/18ம் இலக்க 2013.04.17ம் திகதிய கடிதம் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் என்ற பெயரில் புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இப்பிரதேச சபையினை உருவாக்கும் பொருட்டு மூவர் அடங்கிய குழுவொன்றை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் நியமித்துள்ளார்.
நியமிக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி.என்.சத்தியானந்தியும், குழுவின் உறுப்பினராக மட்டக்களப்பு நில அளவை அத்தியட்சகர் எம்.எம்.காமினி வீரசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள குழு புதிய பிரதேச சபையினை உருவாக்குவதற்கான பிரேரணைகளை ஆராயவுள்ளது. இப்புதிய பிரதேச சபை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவின் ஒரு பகுதியையும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
மேலும் இக்குழுவானது உருவாக்கவிருக்கும் புதிய பிரதேச சபையினது எல்லையினுள் உள்ள குடிமக்களின் வாழ் வசதிகளுக்காக அப்பிரதேச சபையினதும் எல்லைகளையும் தீர்மானிக்கவுள்ளது.
மேலும் அபிவிருத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அருகாமையிலுள்ள ஏதாவது உள்ளுராட்சி மன்றங்களை பாதிக்குமா போன்ற விடயங்களில் இக்குழு ஆராயவுள்ளது.
இதற்கமைவாக பொதுமக்கள் மற்றும் ஏற்புடையதாக பொது நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகளை எழுத்து மூலம் 2013.06.17ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
அனுப்ப வேண்டிய முகவரி திரு.கே.தனபாலசுந்தரம், கோறளைப்பற்று தெற்கு எனப் பெயரிடப்படும் புதிய பிரதேச சபை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும், பிரதேச செயலாளரும், கோறளைப்பற்று தெற்கு கிரான்.