மட்டக்களப்பு நகரில் முதன்முறையாக சகல வசதிகளையும் உடைய இயற்கை வனப்பு கொண்ட பகுதியில் நட்சத்திர ஹோட்டல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியின் பயனாக ஈஸ்ட் லகூன் என்ற பெயரில் இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரின் இயற்கை அழகு மிகு பிரதேசமாகவுள்ள மட்டக்களப்பு வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி அதிலே இந்த நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அகமட், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியினை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு செல்வராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் முதன்முறையாக மாநாட்டு மண்டபம், திருமண மண்டபம், நவீன வசதிகளுடன் கூடிய தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் சர்வதேச தரத்தில் ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.