இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அரசாங்கம் அமைத்திருக்கிறது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைந்த இந்த தெரிவுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்பீரிஸ், பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் அரசின் பங்களிகளான ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் அமைச்சர்களான ரிஸாத் பதியூதீன்,அதாவுல்லா ஆகியோரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர் முத்து சிவலிங்கமும் அடங்கலாக 19 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும் இல்லை.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை கொடுத்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்க முடியாது என்றும், அந்த யோசனைகளின்படி செயற்படுவதற்கே தாமும் தயாராக இருப்பதாகவும், அப்படி பின்வாங்குவதாக இருந்தால் அதற்கு மனித உரிமைகள் பேரவையின் அனுமதியை இலங்கை பெறவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனப்பிரச்சனையுடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜெனிவா தீர்மானங்களின் அடியொற்றியே பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்றும் ரணில் மேலும் கூறினார்.
இத்தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிய பிபிசி தமிழோசை எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக இணக்கப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிபிசியிடம் தெரவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் உள்வாங்கிக் கொள்ளவேண்டியது அவசியம் என்று தெரிவுக்குழு கூட்டம் தொடங்கிய பின்னரும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ கூறினார்.