'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் தலைப்பின் கீழ் மட்டக்களப்பில் சிறந்த சமூக சேவை செய்த 80 வயதைத் தாண்டிய ஐவர் கடந்த சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் சிவில் சமூகச் சங்கத்தின் தலைவருமான எஸ். மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பஸ் நிலையம், மட்டக்களப்பு கேற், புகையிரத நிலைய பலநோக்கக் கட்டிடம், பாலமீன்மடு கலங்கரை விளக்க அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள பால் பதனிடும் நிலையங்கள் என்பவற்றை அமைப்பதற்கு மூல காரணமாகவிருந்த வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டப் (நெக்டெப்) பணிப்பாளர் எஸ்.எம்.குருஸுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு மட்டக்களப்பின் நான்கு சிரேஸ்ட பிரஜைகள் லயன். அருணகிரிநாதன், எஸ்.டி.ஒக்கஸ், பி.கே.என்.மூர்த்தி மற்றும் இ.ஈஸ்வரன் ஆகியோர் சிறந்த சமூக சேவைக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். எலக்ரோணிக் முறையிலான ஆய்வை மேற்கொண்டு திறமையை வெளிக்காட்டிய மட்டக்களப்பு சென் சிசிலியா தேசிய பாடசாலை மாணவி நிரோஷா ஞானப்பிரகாசம் மற்றும் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மொடன் ஆட் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி மாணவன் எஸ். பிரணவன் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கத்தினரால் மாதமொருமுறை வெளிவரும் பாடும்மீன் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் எஸ். பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுங்சழியன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் இணைப்பாளர் பேட்டி பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் அருட் சகோதரர் கை.இராஜேந்திரம் வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி மற்றும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பிளர் பிரின்ஸ் காசிநாதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.