துருக்கியில் வெடித்துள்ள அரச எதிர்ப்பு போராட்டம் காரணமாக இதுவரை 900க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் முஅம்மர் குலர் குறிப் பிட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக வர்த்தக நகர் ஸ்தன்பூலில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் ஏனைய நகரங்களுக்கும் பரவி வருகின்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 26 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததோடு 53 பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர், ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார்.
ஸ்தன்பூலில் இருக்கும் துக்சிம் பூங்காவை மீள் அபிவிருத்தி செய்யும் அரசின் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு வெளியிட்டு வந்தோரை பொலிஸார் அடித்துக் கலைத்ததைத் தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது. உஸ்மானிய பேரரசு காலத்து கட்டுமானங்களை மீள உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களை உடன் நிறுத்துமாறு பிரதமர் எர்டொகன் அழைப்பு விடுத்துள்ளார். "பொலிஸார் நேற்று இருந்தார்கள். இன்றும் அவர்கள் பணியில் இருப்பார்கள். நாளையும் இருப்பார்கள். ஏனென்றால் துக்ஸிம் சதுக்கத்தில் கடும் போக்காளர்கள் காட்டுத்தனமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது" என எர்டொகன் அந்நாட்டு தொலைக்காட்சி ஊடாக தெரிவித்தார்.
ஸ்தன்பூலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் அங்காரா, இஸ்மிர், முகலா மற்றும் அன்டல்யா நகரங்களுக்கும் பரவியுள்ளன.
அரசின் புதிய அபிவிருத்தி திட்டத்தில் துருக்கி தேசத்தின் தோற்றுவிப்பாளர் முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் அமைக்கப்பட்ட பூங்காவும் அழிக்கப்பட்டு அங்கு தொடர் மாடி கட்டடம் ஒன்றை அமைக்கப்படவுள்ளது.
துருக்கியை இஸ்லாமிய நாடாக உருவாக்க கடந்த ஒரு தசாப்தமாக அந்நாட்டை ஆளும் பிரதமர் எர்டொகனின் அரசு முயற்சித்து வருவதாக மதச்சார்பற் றோரிடையே கடும் குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையிலேயே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.
"இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜனநாயகத்தை மதிக்காமல் அவர்களது சிந்தனையை பரப்ப முயற்சிக்கிறார்கள்" என்ற ஸ்தன்பூல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டினார்.
இதில் துருக்கி அரசு கடந்த வாரம் மதுபான விற்பனைக்கு எதிராக கடும் சட்டத்தை கொண்டு வந்ததற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் துருக்கியில் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமிய பின்னணி கொண்ட எர்டொகனின் அரசு மீது மதச் சார்பற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் எர்டொகன் ஆட்சிக்கு வந்த பின்னரே ஐரோப்பாவின் மோசமான பொருளாதாரத்தைக் கொண்ட துருக்கி உலகின் 15 ஆவது பொருளாதார சக்தியாக மாறியது.