6/28/2013

| |

இலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது

சார்க் பிராந்தியத்தில் இலங்கை கல்விப் போதனையில் முன்னிலையில் இருக்கிறது

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை நிறுவனமான நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை பற்றிய அர்த்தமற்ற, ஆதாரமற்ற கருத்துக்களை வெளி யிட்டு எமது நாட்டுக்கு அவதூறை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்ற போதிலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இன்னுமொரு பலம் வாய்ந்த ஐ.நா. சர்வதேச சிறுவர் நிதியமான யுனிசெப் ஸ்தாபனம் இலங்கையின் கல்வித் தரத்தை பாராட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1920ம் ஆண்டு தசாப்தம் முதல் கல்வித்துறையில் அதுவும் ஆங்கிலம் மூலமான கல்வித் துறை யில் அதி உன்னத நிலையில் இருந்தது. அதனால்தான் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையை சின்ன இங்கிலாந்து என்று பாராட்டுத் தெரிவித்தனர்.
காலப்போக்கில் நுவரெலியாவுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்ட, இங்கு பணிபுரிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நுவரெலியாவுக்கு சின்ன இங்கிலாந்து என்று பெயர் சூட்டி சிறப்பித்தனர். அந்த கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், மலையகத்திலும், கொழும்பிலும் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளே இன்றும் கூட கல்வியில் தரம் மிக்கவையாக இருக்கின்றன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்பற்றிக்ஸ், சென்ஜோன்ஸ், பருத்தி த்துறை ஹாட்லி கல்லூரி, தெல்லிப்பழை மஹாஜன கல்லூரி மலைய கத்தில் சென்.சில்வஸ்டர்ஸ் கல்லூரி, டிரின்டி கல்லூரி கொழும்பில் றோயல் கல்லூரி, கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, சென்ஜோசப் கல்லூரி, சென் பீட்டர்ஸ் கல்லூரி, சென் பெனடிக்ஸ் கல்லூரி ஆகியன சுமார் 80 முதல் 90 வருடங்களாக இந் நாட்டு மாண வர்களின் கல்விக்கு அடித்தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுனிசெப் ஸ்தாபனம் கல்வி அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய உதவி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இலங்கையில் இன்று 2 சதவீதமான பிள்ளைகளே பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வில்லை என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதுவே, முதல் தடவையாக நடத்தப்பட்ட ஆய்வென்றும் 2010ம் ஆண் டில் ஆரம்பித்த ஆய்வு இப்போது முடிவடைந்துள்ளதென்று யுனிசெப் நிறுவனத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி திருமதி என்டனியோ டீமியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கல்வித்துறையில் ஆண்களுக்கு சாதகமாக பால்நிலை புள்ளிவிபரம் அதிகமாக இருக்கிறதென்று தெரிவித்த அவர், இரண்டாம் நிலை கல்வியில் நகரப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மாணவி களும் அதிகமாக சேர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
செல்வந்தர், வறியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரது பிள்ளைகளும் கல்வி கற்கிறார்கள் என்று தெரிவித்த அவர், செல்வந்தர்களின் பிள்ளை கள் நகரப்புறங்களில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கின்ற போதிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். அரசாங்கப் பாடசாலை களில் உள்ள வறிய பிள்ளைகளுக்கு பகல் உணவு அல்லது பகல் பொழுதில் ஒரு கப் பால் வழங்கப்படுவதுடன் சீருடைகளும் இலவசப் புத்தகங்களும் மாணவ, மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் புள்ளிவிபரத்தின்படி இலங்கையில் உள்ள 5 வயதிற்கும் 14 வய திற்கும் இடைப்பட்ட 98.2 சதவீதமான மாணவர்களும், மாணவியரும் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை வகுப்புகளில் கல்வி கற்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் 98.6 சதவீதமானோர் நகரப்புறங் களில் உள்ள பாடசாலைகளிலும் 98.3 சதவீதமானோர் கிராமப்புறங்க ளில் உள்ள பாடசாலைகளிலும் 95.6 சதவீதமானோர் மலையக தோட் டப்புற பாடசாலைகளிலும் கல்வி கற்கிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, சார்க் பிராந்திய நாடுகளில் இலங்கைப் பிள்ளைகளே பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய விகிதாசாரத்தின் அடிப்படையில் சென்று கல்விகற்கிறார்கள் என்றும் இது எமது நாட்டின் கல்வி த்தரத்தின் உயர்வுக்கு சான்று பகர்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இன்று இலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இலவசக்கல்வி, பிள்ளைகளுக்கு தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மற்றும் பெற்றோர் பாரம்பரியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்தல் ஆகியனவே கல்வியின் தரம் ஏனைய சார்க் நாடுகளை விட இலங்கையில் உயர்ந்திருப்பதற்கு பிர தான காரணமென்று தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டு காலத்தில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் துன்புறுத்தல் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பிள்ளைக ளுக்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாதிருந்த போதிலும் இப்போது யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகளில் வடக்கிலும், கிழக்கிலும் கல்வி நிலை மீண்டும் மறுமலர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார்.
யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினர் பாடசாலை பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக பலவந்தமாக சேர்த்துக் கொண்ட போதிலும் அரசாங்கம் யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த அப்பாவி சிறுவர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்கு மன்னிப்பளித்த பின்னர் இன்று மீண்டும் பாடசாலைகளில் தங்களின் விடுபட்ட கல்வியை தொடர்வ தற்கு ஒழுங்குகளை செய்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் பார்த்து எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்புகின்ற போதும் எங்கள் நாட்டின் கல்வித்துறை இந்தளவுக்கு சாதனை படைத்திருப்பதை பார்த்தும் அதுபற்றி பாராட்டுத் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது வேதனையை அளிக்கிறது.