6/15/2013

| |

சட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப்பி வைப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வுக்கு படகுகள் மூலம் பயணித்தவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் திட்டத்தின் கீழ் இதுவரை 30 விமானங்களில் இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கோனர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரை 1247 இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1035 பேர் பலவந்தமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியிருந்தன. இதில் பயணித்த எவரையும் உயிருடன் மீட்கமுடியாது போனதாக அவுஸ்தி ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் கடலில் மூழ்கிய படகொன்றில் பயணித்தவர்கள் இலங்கையர்கள் என்ற சந்தேகம் எழுப்பியுள்ளது. இது தொடர்பிலான விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.