6/25/2013

| |

13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் -தலைவர் ரி.எம்.வி.பி.

13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதே வேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதல் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தாh.;
சி. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியலில் மிகவும் பேசப்படுகின்ற ஓர் முக்கிய அம்சமாக 13ஆவது திருத்தச் சட்டம் திகழ்கிறது. அதாவது 13ஆவது திருத்த சட்டத்தினை முற்றாக அகற்றுதல் அல்லது; அதனுடைய முக்கிய சரத்துக்களை நீக்குதல் என்கின்ற பிரச்சினை பல விமர்சனங்களைக் கொண்டமைந்திருக்கின்றன. இது தொடர்பில் பல அரசியல் வாதிகளும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக இதற்கு எதிராக ஒரு சில பொறுப்புமிக்க ஆளுங்கட்சி அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவன் மற்றும் அரசின் பங்காளி கட்சிகளில் ஒன்றின் தலைவன் என்ற வகையிலும் மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறான கருத்தானது உண்மையில் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைத் தேசத்தின் சமூக நல்லிணக்கத்தோடு கூடிய அபிவிருத்திற்கு தடையாக அமைவதோடு ஆரோக்கியமற்றதொன்றாகவும் அது காணப்படுகிறது.
அரசுடன் ஓர் பங்காளி கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில்  எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம். அதேவேளை தென்னிலங்கையிலிருந்து கொண்டு இனவாத விசத்தை கக்குகின்றவர்களுக்கு எதிராகவும் எமது சிறுபான்மை மக்களது அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்ற உண்மையான உள்ளங் கொண்ட அரசியல் தலைவர்களுடன் இணைந்து கரம் கோர்த்து செயற்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது என்ற செய்தியையும் இந் நன்னாளிலே தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சடைகின்றேன் எனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்களங்களின் பொறியியலாளர் ஞானப்பிரகாசம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான புவி, ஞானமுத்து, நடராஜா, மற்றும் கிரான் கூட்டுறவு திணைக்களத்தின் பிரதிநிதிகள், முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள், ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
குறிப்பு:- ரெஜி என்பவர் கருணா அம்மானின் சொந்த அண்ணன். இவர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.