* எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு குறித்து இதுவரை தகவல் இல்லை
* இறுதிவரை எதிர்பார்ப்போம்; இதில் பலவந்தம் கிடையாது
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ஐ.தே.க., ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழுவின் முதல் கூட்டத்தை ஜுலை 09 ஆம் திகதி நடத்தவிருப்பது உறுதி. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லையென குழுத் தலைவரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்.
தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை எமக்கு எந்தக் கட்சியிடமிருந்தும் கலந்து கொள்ளவுள்ள பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் இதன் போது கூறினார்.
ஒரு சில கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ள போதும் குழுவின் தலைவரென்ற வகையில் எனக்கு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. ஜுலை 09 ஆம் திகதிக்கு போதிய கால அவகாசம் உள்ளமையினால், தற்போது தெரிவுக்குழுவினை எதிர்த்து நிற்கும் கட்சிகள் கூட தமது பிரதிநிதிகளின் பெயர்களை எமக்கு அனுப்பி வைப்பரென நம்புகிறோம்.
தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் ஆரம்பமாகவுள்ள ஜுலை 09 ஆம் திகதியன்று அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பிரதிநிதிகளுக்கு கூட உடனடி அழைப்பு விடுக்க தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியென்ற வகையில் நாம் எமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான எமது நிலைப்பாடு குறித்து தெரிவு செய்யப்பட்ட எதிர்க் கட்சிகளுடன் பரந்துபட்ட கலந்துரையா டல்களில் ஈடுபட வேண்டுமென்பதற்காகவே தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க மேற்படி கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்க முன்வர வேண்டும்.
சந்தர்ப்பத்தை வழங்க முடியுமே தவிர எந்தக் கட்சியினரையும் எம்மால் பலவந்தப்படுத்த முடியாது. அத்துடன் எக்கட்சியினரையும் நாம் வற்புறுத்தி கட்டாயப்படுத்தவுமில்லை. குறித்த தினத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாத விடத்தும் எமது திட்டங்களுக்கமைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நிராகரிப்பதாக ஜே.வி.பி.யினரும் அறிவித்துள்ளனர். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளவுள்ள தமது பிரதிநிதிகள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்க வில்லையெனத் தெரிய வருகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 12 உறுப்பினர்களுக்கு கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.