6/30/2013

| |

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது: சுரேஷ்

சுரேஷ் பிரேமசந்திரன்

தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனந்தசங்கரி கலந்துகொள்ளவில்லை. இருந்தபோதிலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது முழு ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்தார். இதற்கமையவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/28/2013

| |

இலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது

சார்க் பிராந்தியத்தில் இலங்கை கல்விப் போதனையில் முன்னிலையில் இருக்கிறது

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை நிறுவனமான நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை பற்றிய அர்த்தமற்ற, ஆதாரமற்ற கருத்துக்களை வெளி யிட்டு எமது நாட்டுக்கு அவதூறை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்ற போதிலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இன்னுமொரு பலம் வாய்ந்த ஐ.நா. சர்வதேச சிறுவர் நிதியமான யுனிசெப் ஸ்தாபனம் இலங்கையின் கல்வித் தரத்தை பாராட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1920ம் ஆண்டு தசாப்தம் முதல் கல்வித்துறையில் அதுவும் ஆங்கிலம் மூலமான கல்வித் துறை யில் அதி உன்னத நிலையில் இருந்தது. அதனால்தான் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையை சின்ன இங்கிலாந்து என்று பாராட்டுத் தெரிவித்தனர்.
காலப்போக்கில் நுவரெலியாவுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்ட, இங்கு பணிபுரிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நுவரெலியாவுக்கு சின்ன இங்கிலாந்து என்று பெயர் சூட்டி சிறப்பித்தனர். அந்த கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், மலையகத்திலும், கொழும்பிலும் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளே இன்றும் கூட கல்வியில் தரம் மிக்கவையாக இருக்கின்றன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்பற்றிக்ஸ், சென்ஜோன்ஸ், பருத்தி த்துறை ஹாட்லி கல்லூரி, தெல்லிப்பழை மஹாஜன கல்லூரி மலைய கத்தில் சென்.சில்வஸ்டர்ஸ் கல்லூரி, டிரின்டி கல்லூரி கொழும்பில் றோயல் கல்லூரி, கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, சென்ஜோசப் கல்லூரி, சென் பீட்டர்ஸ் கல்லூரி, சென் பெனடிக்ஸ் கல்லூரி ஆகியன சுமார் 80 முதல் 90 வருடங்களாக இந் நாட்டு மாண வர்களின் கல்விக்கு அடித்தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுனிசெப் ஸ்தாபனம் கல்வி அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய உதவி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இலங்கையில் இன்று 2 சதவீதமான பிள்ளைகளே பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க வில்லை என்ற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதுவே, முதல் தடவையாக நடத்தப்பட்ட ஆய்வென்றும் 2010ம் ஆண் டில் ஆரம்பித்த ஆய்வு இப்போது முடிவடைந்துள்ளதென்று யுனிசெப் நிறுவனத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி திருமதி என்டனியோ டீமியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கல்வித்துறையில் ஆண்களுக்கு சாதகமாக பால்நிலை புள்ளிவிபரம் அதிகமாக இருக்கிறதென்று தெரிவித்த அவர், இரண்டாம் நிலை கல்வியில் நகரப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மாணவி களும் அதிகமாக சேர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
செல்வந்தர், வறியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரது பிள்ளைகளும் கல்வி கற்கிறார்கள் என்று தெரிவித்த அவர், செல்வந்தர்களின் பிள்ளை கள் நகரப்புறங்களில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளிலும், தனியார் பாடசாலைகளிலும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கின்ற போதிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். அரசாங்கப் பாடசாலை களில் உள்ள வறிய பிள்ளைகளுக்கு பகல் உணவு அல்லது பகல் பொழுதில் ஒரு கப் பால் வழங்கப்படுவதுடன் சீருடைகளும் இலவசப் புத்தகங்களும் மாணவ, மாணவியருக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் புள்ளிவிபரத்தின்படி இலங்கையில் உள்ள 5 வயதிற்கும் 14 வய திற்கும் இடைப்பட்ட 98.2 சதவீதமான மாணவர்களும், மாணவியரும் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை வகுப்புகளில் கல்வி கற்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களில் 98.6 சதவீதமானோர் நகரப்புறங் களில் உள்ள பாடசாலைகளிலும் 98.3 சதவீதமானோர் கிராமப்புறங்க ளில் உள்ள பாடசாலைகளிலும் 95.6 சதவீதமானோர் மலையக தோட் டப்புற பாடசாலைகளிலும் கல்வி கற்கிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, சார்க் பிராந்திய நாடுகளில் இலங்கைப் பிள்ளைகளே பாடசாலைகளுக்கு ஆகக்கூடிய விகிதாசாரத்தின் அடிப்படையில் சென்று கல்விகற்கிறார்கள் என்றும் இது எமது நாட்டின் கல்வி த்தரத்தின் உயர்வுக்கு சான்று பகர்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இன்று இலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இலவசக்கல்வி, பிள்ளைகளுக்கு தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மற்றும் பெற்றோர் பாரம்பரியமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்தல் ஆகியனவே கல்வியின் தரம் ஏனைய சார்க் நாடுகளை விட இலங்கையில் உயர்ந்திருப்பதற்கு பிர தான காரணமென்று தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டு காலத்தில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் துன்புறுத்தல் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பிள்ளைக ளுக்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாதிருந்த போதிலும் இப்போது யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகளில் வடக்கிலும், கிழக்கிலும் கல்வி நிலை மீண்டும் மறுமலர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார்.
யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினர் பாடசாலை பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக பலவந்தமாக சேர்த்துக் கொண்ட போதிலும் அரசாங்கம் யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த அப்பாவி சிறுவர்கள் மீது கருணை காட்டி, அவர்களுக்கு மன்னிப்பளித்த பின்னர் இன்று மீண்டும் பாடசாலைகளில் தங்களின் விடுபட்ட கல்வியை தொடர்வ தற்கு ஒழுங்குகளை செய்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் பார்த்து எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்புகின்ற போதும் எங்கள் நாட்டின் கல்வித்துறை இந்தளவுக்கு சாதனை படைத்திருப்பதை பார்த்தும் அதுபற்றி பாராட்டுத் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது வேதனையை அளிக்கிறது.
»»  (மேலும்)

| |

எகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம்

நாட்டை சீர்குலைத்துவிடுமென ஜனாதிபதி எச்சரிக்கை: பிரதான நகரங்களில் இராணுவம் குவிப்பு
உள்நாட்டில் தொடரும் பதற்றம் நாட்டை முழுமையாக செயலிழக்கச் செய்துவிடும் என எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி எச்சரித்துள்ளார்
ஜனநாயக முறையில் தெரிவான முர்சி தனது முதல் ஆண்டு நிறைவையொட்டி கடந்த புதன்கிழமை இரவு தொலைக்காட்சி ஊடே உரையாற்றினார். அதில் ஒருசில தவறுகளை இழைத்த தாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தன் மீதான எதிர்ப்பு செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சி என முர்சி எச்சரித்தார்.
எதிர்ப்பாளர்கள் முர்சியை பதவிவிலகக் கோரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி பிரதான நகரங்கள் எங்கும் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
முர்சி உரையாற்றும் முன்னரும் புதன்கிழமை வடக்கு நகரான மன்சூராவில் மோதல் வெடித்துள்ளது. ஜனாதிபதி ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 170 பேர் காயமடைந்தனர்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முர்சி எகிப்தில் முதல் முறையாக நடந்த சுயாதீனமான தேர்தலில் வென்று கடந்த 2012 ஜூன் 30ஆம் திகதி ஜனாதிபதியாக தேர்வானார். ஜனாதிபதி பதவியில் அவரது முதல் ஆண்டு, அரசியல் பதற்றம், பொருளாதார நெருக்கடி ஆகிய விவகாரங்களில் கழிந்தது. இந்நிலையில் தனது இரண்டு மணி நேர தொலைக்காட்சி உரையில் முர்சி தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். அத்துடன் தவறுகள் குறித்து ஒப்புதல் அளித்த முர்சி அதிரடி சீர்திருத்தங்களுக்கும் வாக்குறுதி அளித்தார்.
“நான் ஒரு சில விடயங்களில் சரியாக செயற்பட்டேன். மற்றும் சில விடயங்களில் தவறும் செய்தேன்” என்று கூறிய அவர், ‘புரட்சியின் இலக்கை எட்ட அதிரடி நடவடிக்கைகள் தேவை என்பதை கடந்த ஓர் ஆண்டு பதவிக்காலத்தில் புரிந்துகொண்டேன்” என்றார். அரசை மாற்ற நினைப்பவர்கள் தேர்தலில் குதித்து அந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என சவால் விடுத்த முர்சி, எதிர்ப்பாளர்களுக்கு பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தார். முர்சியின் உரையை ஒட்டி அரச எதிர்ப்பாளர்கள் தலைநகரில் உள்ள தஹ்ரீர் சதுக்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னால் ஒன்றுதிரண்டனர். எனினும் நாட்டை கட்டுப்படுத்த முடியாத மோதலுக்குள் இட்டுச்செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ தலைமை ஏற்கனவே எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் முர்சி ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்தப்பட விருக்கும் ஆர்ப்பாட்ட இடத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ரபால் அல் அதவியா பள்ளி வாசல் வீதியில் ஆயுதம் தரித்த டிரக் வண்டிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையை பாதுகாக்க துருப்புகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு பாரிய வாகன நெரிசலும் காணப்படுகிறது. எதிர்வரும் ஆர்ப்பாட்டங்களை ஒட்டி கெய்ரோ குடியிருப்பாளர்கள் தற்போதே உணவுகளை சேமித்துவைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி முர்சி பதவி விலகக் கோரும் விஞ்ஞாபனத்தில் 13 மில்லியன் கையொப்பம் பெறப்பட்டிருப்பதாகவும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அரச எதிர்ப்பாளர்கள் கோரிவருகின்றனர்.
எனினும் உள்நாட்டில் தொடரும் வன்முறை மற்றும் பதற்ற சூழல் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலா பயணத்துறையையே பாரிய அளவில் பாதிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
எகிப்தில் இளைஞர்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு வெளிநாட்டு நாணய இருப்பும் வீழ்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்டபடி ஜுலை 09 இல்

* எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு குறித்து இதுவரை தகவல் இல்லை
* இறுதிவரை எதிர்பார்ப்போம்; இதில் பலவந்தம் கிடையாது
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ஐ.தே.க., ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழுவின் முதல் கூட்டத்தை ஜுலை 09 ஆம் திகதி நடத்தவிருப்பது உறுதி. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லையென குழுத் தலைவரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்.
தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை எமக்கு எந்தக் கட்சியிடமிருந்தும் கலந்து கொள்ளவுள்ள பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் இதன் போது கூறினார்.
ஒரு சில கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ள போதும் குழுவின் தலைவரென்ற வகையில் எனக்கு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. ஜுலை 09 ஆம் திகதிக்கு போதிய கால அவகாசம் உள்ளமையினால், தற்போது தெரிவுக்குழுவினை எதிர்த்து நிற்கும் கட்சிகள் கூட தமது பிரதிநிதிகளின் பெயர்களை எமக்கு அனுப்பி வைப்பரென நம்புகிறோம்.
தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் ஆரம்பமாகவுள்ள ஜுலை 09 ஆம் திகதியன்று அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பிரதிநிதிகளுக்கு கூட உடனடி அழைப்பு விடுக்க தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியென்ற வகையில் நாம் எமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான எமது நிலைப்பாடு குறித்து தெரிவு செய்யப்பட்ட எதிர்க் கட்சிகளுடன் பரந்துபட்ட கலந்துரையா டல்களில் ஈடுபட வேண்டுமென்பதற்காகவே தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க மேற்படி கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்க முன்வர வேண்டும்.
சந்தர்ப்பத்தை வழங்க முடியுமே தவிர எந்தக் கட்சியினரையும் எம்மால் பலவந்தப்படுத்த முடியாது. அத்துடன் எக்கட்சியினரையும் நாம் வற்புறுத்தி கட்டாயப்படுத்தவுமில்லை. குறித்த தினத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாத விடத்தும் எமது திட்டங்களுக்கமைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நிராகரிப்பதாக ஜே.வி.பி.யினரும் அறிவித்துள்ளனர். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளவுள்ள தமது பிரதிநிதிகள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்க வில்லையெனத் தெரிய வருகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 12 உறுப்பினர்களுக்கு கலந்துகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

கிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் வர்த்தக முகாமைத்துவம் ஆகிய பீடங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள இந்த பீடத்தினைச் சேர்ந்த மாணவர்கள் விடுதிகளுக்கு 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சமூகமளிக்கும்படி பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலதிக விபரங்களுக்கு பீடாதிபதி/விவசாய பீடம்: 065- 2240530,
பீடாதிபதி/வரத்தக முகாமைத்துவ பீடம்: 065 -2240214, சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள்: 065-2240584, உதவிப் பதிவாளர்/மாணவர் நலன்புரிச்சேவைகள்: 065-2240731என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏனைய பீடங்களின் புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும என கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
»»  (மேலும்)

6/27/2013

| |

தியாகிகள் தினம்


தியாகிகள் தினம் 


june 19 web
»»  (மேலும்)

6/26/2013

| |

'தமிழினி விடுதலை'

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புதனன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த இவர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கையளிக்கப்பட்டதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்சன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்க கட்சியின் வேட்பாளராகத் தமிழினி போட்டியிடவுள்ளர் என்றும் அதற்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவகாமி ஆகிய தமிழினி வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. இது குறித்து தமிழினியும் இது வரையில் வாய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

6/25/2013

| |

13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் -தலைவர் ரி.எம்.வி.பி.

13ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிருவகித்தவன் என்ற அடிப்படையிலும் அதே வேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதல் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தாh.;
சி. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியலில் மிகவும் பேசப்படுகின்ற ஓர் முக்கிய அம்சமாக 13ஆவது திருத்தச் சட்டம் திகழ்கிறது. அதாவது 13ஆவது திருத்த சட்டத்தினை முற்றாக அகற்றுதல் அல்லது; அதனுடைய முக்கிய சரத்துக்களை நீக்குதல் என்கின்ற பிரச்சினை பல விமர்சனங்களைக் கொண்டமைந்திருக்கின்றன. இது தொடர்பில் பல அரசியல் வாதிகளும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக இதற்கு எதிராக ஒரு சில பொறுப்புமிக்க ஆளுங்கட்சி அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவன் மற்றும் அரசின் பங்காளி கட்சிகளில் ஒன்றின் தலைவன் என்ற வகையிலும் மிகவும் வேதனையளிக்கிறது. இவ்வாறான கருத்தானது உண்மையில் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைத் தேசத்தின் சமூக நல்லிணக்கத்தோடு கூடிய அபிவிருத்திற்கு தடையாக அமைவதோடு ஆரோக்கியமற்றதொன்றாகவும் அது காணப்படுகிறது.
அரசுடன் ஓர் பங்காளி கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில்  எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம். அதேவேளை தென்னிலங்கையிலிருந்து கொண்டு இனவாத விசத்தை கக்குகின்றவர்களுக்கு எதிராகவும் எமது சிறுபான்மை மக்களது அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்ற உண்மையான உள்ளங் கொண்ட அரசியல் தலைவர்களுடன் இணைந்து கரம் கோர்த்து செயற்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது என்ற செய்தியையும் இந் நன்னாளிலே தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சடைகின்றேன் எனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத் திணைக்களங்களின் பொறியியலாளர் ஞானப்பிரகாசம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான புவி, ஞானமுத்து, நடராஜா, மற்றும் கிரான் கூட்டுறவு திணைக்களத்தின் பிரதிநிதிகள், முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகள், ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
குறிப்பு:- ரெஜி என்பவர் கருணா அம்மானின் சொந்த அண்ணன். இவர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.
»»  (மேலும்)

| |

துரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்


-அதிரதன்
 
கிழக்குப் பல்கலைக்கழகமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக பல கல்விமான்கள் இருந்துள்ளார்கள். தற்போதைய நிலையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகள் முக்கியமானவையாகவும், முன்னேற்றமானவையாகவும் பார்க்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும், தற்போதைய பல்கலைக்கழ அபிவிருத்திகள் தொடர்பிலும் இந்தக்கட்டுரையில் ஆராயலாம்.
 
மட்டக்களப்பு மாத்திரமல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களுமே கல்வி மற்றும் பொருளாதாரம் என அனைத்து விடயங்களிலும் கடந்த 30 வருடங்களாக அழிவுகளையும், பின்னடைவுகளையும் இன்னல்களையும் சந்தித்திருக்கின்றன.
 
இக்காலத்தில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போனதும், கொல்லப்பட்டதும், நாட்டை விட்டு ஓடியதும் என பல்வேறு விவகாரங்களும் நடந்து முடிந்திருக்கின்றன. ஏதோ கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கில் அமைதி நிலை ஏற்பட்டு நிம்மதிப் பெருமூச்சொன்று விடப்பட்டு மக்கள் நிமிர்ந்திருக்கிறார்கள். 
 
இந்த நிலையில் கூட தமிழ் மக்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். இதில் முயற்சிகளை மேற்கொண்ட பல்கலைக்கழகம் என்ற வகையில், கிழக்குப் பல்கலைக்கழகம் முதலிடத்தில் இருந்தது என்றுகூடச் சொல்லலாம்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தருக்கு இருந்த வெற்றிடம் பதில் உபவேந்தரால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும், கடந்த 14 மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவில் வசித்து வந்த கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா உப வேந்தராக நியமிக்கப்பட்டார். 
 
இவர் நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகமானது பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுவருகிறது. கடந்த வருடங்களை விடவும் இந்த வருடத்தில் ஒரு தொகை மாணவர்கள் அதிகமாகவும் உள்வாங்கப்பட்டனர். மேலதிகமாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கென விடுதிகளை அமைக்கும் பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கென புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விடுதிப் பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்ற குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்தவதற்கான வேலைகளை பல்கலைக்கழக நிருவாகம் மேற்கொண்டு வருகிறது. நடைபெற்று வரும் அபிவிருத்திகள் குறித்து கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென (Faculty of Health care sciences) மாணவர் விடுதிகள் இல்லை. தற்பொழுதுதான் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது. 
 
அதனால் நாங்கள் மட்டக்களப்பு நகரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகளாக பிள்ளைகளுக்கு வழங்கியிருக்கிறோம். வந்தாறுமூலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை விடவும் இவர்களுக்கு நல்லவகையான விடுதி ஏற்பாடுகளே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இந்த வருடத்தில் கடந்த வருடத்தினை விடவும் அதிகமாக 80 மாணவர்கள் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். விடுதி வசதி தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த வருடம் சேர்க்கப்பட்ட மேலதிக மாணவர்களுக்காக அரசாங்கத்தால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியனில் 300 மில்லியன் ரூபா எமது பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 80 மாணவிகள் தங்கக் கூடிய செமி பேர்மனற் கட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும். அதன் பின்னர் விடுதிகளுக்காக பயன்படுத்தப்படும் வாடகை வீடுகள் ஆண்கள் விடுதிகளாகப் பயன்படுத்தப்படும். இதன் பின்னர் 2 - 3 வருடங்களுக்கு மாணவர் விடுதிப் பிரச்சினைகள் இருக்காது, அந்த இடைவெளிக்குள் பிள்ளையாரடியில் மாணவர் விடுதி வேலைகள் நிறைவடைந்துவிடும். 
 
அது தவிர வந்தாறுமூலையிலுள் பிரதான பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. வந்தாறுமூலை யுத்தகாலத்தில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட அபிவிருத்திகள் கிடைக்கப் பெறாத ஒரு ஐசலேற்றட் (Isoletted) பிரதேசம் என்ற வகையில் அங்கு பெரிய வீடுகளை வாடகைக்குப் பெறுவதிலும் சிரமம் காணப்படுகிறது. அங்குள்ள விடுதியில் 750 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதியில் 1200 மாணவர்கள் தங்கியுள்ளனர். அது தவிரவும் வீடுகளும் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன.
 
இங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சரவை விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அத்துடன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 150 தொடக்கம் 200 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய இரண்டு செமி பேர்மனற் விடுதிகள் 69 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன. அதே நேரம் கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்திற்கு 31 மில்லியனும், திருமலைக்கு 15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிரவும், 70 மில்லியன் ரூபாவுக்கும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
அத்துடன் மாவர்களுக்கான உள்ளக விளையாட்டரங்கம், விரிவுரை மண்டபங்கள், பரீட்சை மண்டபங்கள் ஆகியன இன்னும் இரண்டு 3 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளன.
 
35 வருடங்களாக யுத்தப் பாதிப்புகளுக்குள் இருந்து வந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு அரசாங்கம் தாராளமான நிதி ஒதுக்கீடுகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தந்து வருகிறது. அந்த வகையில் நிறைவு பெற்ற என்னுடைய 14 மாத பதவிக்காலத்தில் இந்த நிதிகள் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி வேலைகளை துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. 
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் ஆகியோருக்கும் நன்றிகளை இந்தவேளையில் தெரிவித்தே ஆக வேண்டும். 
 
அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்களாக மக்களுடைய மனங்களிலுள்ள யுத்தக் கொடுமைகளால் உருவான மனக் கசப்புகளே இருக்கின்றன. ஆனாலும் தற்போது தமிழ் - சிங்கள மாணவர்களிடையே இன உறவு மேம்பட்டு பிரச்சினைகள் குறைந்த நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி வேலைகளாக பிள்ளையாரடியில் 360 மில்லியன் செலவில், மாணவர் விடுதி சுற்றுமதில் நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கென 199 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர்களுக்கான விரிவுரை, கிளினிக், மற்றும் ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்று (Profesorial Unit) அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கென தனயான தொகுதியாக இது இருக்கும்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 7ஆவது உப வேந்தராகப் பொறுப்பேற்ற கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் 14 மாத பதவிக்காலத்தில் இதுவரை 250 மில்லியன் செலவிலான உயிரியல் பீடத்துக்கான கட்டடம் அமைக்கப்பட்டு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
150 மில்லியன் செலவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகம்புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக சுற்றுமதில், நல்லையா மண்டபம், வெள்ளப் பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையில் வடிகாலமைப்பு, பழைய கட்டடங்கள் புனரமைப்பு என்பன நடைபெற்றுள்ளன.
 
அவை தவிரவும், நூலகக் கட்டடத் தொகுதி, கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டடம் என்பன 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கடந்த காலத்தில் இருந்து வந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதிலுள்ள தாமதங்கள் நீக்கப்பட்டு பரீட்சை முடிவடைந்து 6 வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிடும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
3 தசாப்தங்களுக்கும் மேலாக இன்னல்களையும் நெருக்குதல்களையும், சந்தித்துக் கொண்டிருந்த ஒரு பல்கலைக்கழகத்தினை குறுகிய காலத்துக்குள் மீண்டும் தூக்கி நிமிர்த்துவது சாதாரணமான விடயமல்ல. அந்த வேலையை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்துவரும் நிர்வாகத்துக்கு தோள் கொடுக்க வேண்டியது பாகுபாடுகள் இன்றி ஒட்டு மொத்த தமிழச் சமூகத்தின் கடமையாகவே பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

6/24/2013

| |

41வதுஇலக்கியச்சந்திப்பு – யாழ்ப்பாணம்2013

ஊடக அறிக்கை:
41வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.
1.பாரம்பரியக் கலைகள்
மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின்  கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.
2.சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் சாதியம்.
3.சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)
4.இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள்  மற்றும் கவின் கலைகள்.
5.தேசிய இனங்களின் பிரச்சினைகள்
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.
மேற்கண்ட கருத்தாங்கங்களில்  பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும்..
*கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
- 41வது இலக்கியச் சந்திப்புஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம்.
»»  (மேலும்)

6/23/2013

| |

மட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்தார் அமைச்சர் பசில் ராஜபக்ச

மட்டக்களப்பு நகரில் முதன்முறையாக சகல வசதிகளையும் உடைய இயற்கை வனப்பு கொண்ட பகுதியில் நட்சத்திர ஹோட்டல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியின் பயனாக ஈஸ்ட் லகூன் என்ற பெயரில் இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரின் இயற்கை அழகு மிகு பிரதேசமாகவுள்ள மட்டக்களப்பு வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி அதிலே இந்த நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அகமட், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியினை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு செல்வராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் முதன்முறையாக மாநாட்டு மண்டபம், திருமண மண்டபம், நவீன வசதிகளுடன் கூடிய தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் சர்வதேச தரத்தில் ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

6/22/2013

| |

இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது

இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அரசாங்கம் அமைத்திருக்கிறது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைந்த இந்த தெரிவுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்பீரிஸ், பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் அரசின் பங்களிகளான ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் அமைச்சர்களான ரிஸாத் பதியூதீன்,அதாவுல்லா ஆகியோரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர் முத்து சிவலிங்கமும் அடங்கலாக 19 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும் இல்லை.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை கொடுத்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்க முடியாது என்றும், அந்த யோசனைகளின்படி செயற்படுவதற்கே தாமும் தயாராக இருப்பதாகவும், அப்படி பின்வாங்குவதாக இருந்தால் அதற்கு மனித உரிமைகள் பேரவையின் அனுமதியை இலங்கை பெறவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனப்பிரச்சனையுடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜெனிவா தீர்மானங்களின் அடியொற்றியே பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்றும் ரணில் மேலும் கூறினார்.
இத்தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அறிய பிபிசி தமிழோசை எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக இணக்கப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிபிசியிடம் தெரவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் உள்வாங்கிக் கொள்ளவேண்டியது அவசியம் என்று தெரிவுக்குழு கூட்டம் தொடங்கிய பின்னரும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ கூறினார்.
»»  (மேலும்)

6/21/2013

| |

முஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு

20130621_145558மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் பிரதான வீதி சந்தியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகம் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்ட நாசகார சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரியவருகின்றது.
உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தை நேற்று இரவு 10.30 மணியளவில் இனம்தெரியாத சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சீனிமுகம்மது பரீட் காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.
நேற்று இரவு நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
»»  (மேலும்)

| |

களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்கப்பு,
களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் ஒனறை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது களுமுந்தன்வெளிக் கிராம மக்களிடம் கலந்துரையாடிய அவர் கிராம மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, களுமுந்தன்வெளிக் கிராமத்தின் விநாயகர் கலைக் கழகத்தினால் புதிதாகக் நிரிமாணிக்கப்பட்ட விநாயகர் கலையரங்கினையும் அவர் திறந்துவைத்தார்.
இதன்போது, எதிர்வரும் ஆண்டில் தமது நிதியொதுக்கீட்டின் கீழ் களுமுந்தன்வெளிக் கிராமத்தில் காணப்படுகின்ற வீதிப்போக்குவரத்து பிரச்சனை, குடிநீர் பிரச்சனை போன்றவற்றினை நிவர்த்தி செய்து தருவதாகவும் அவர் இக்கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
»»  (மேலும்)

6/17/2013

| |

வாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா

'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் தலைப்பின் கீழ் மட்டக்களப்பில் சிறந்த சமூக சேவை செய்த 80 வயதைத் தாண்டிய ஐவர் கடந்த சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் சிவில் சமூகச் சங்கத்தின் தலைவருமான எஸ். மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பஸ் நிலையம், மட்டக்களப்பு கேற், புகையிரத நிலைய பலநோக்கக் கட்டிடம், பாலமீன்மடு கலங்கரை விளக்க அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள பால் பதனிடும் நிலையங்கள் என்பவற்றை அமைப்பதற்கு மூல காரணமாகவிருந்த வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டப் (நெக்டெப்) பணிப்பாளர் எஸ்.எம்.குருஸுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு மட்டக்களப்பின்  நான்கு சிரேஸ்ட பிரஜைகள் லயன். அருணகிரிநாதன், எஸ்.டி.ஒக்கஸ், பி.கே.என்.மூர்த்தி மற்றும் இ.ஈஸ்வரன் ஆகியோர் சிறந்த சமூக சேவைக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். எலக்ரோணிக் முறையிலான ஆய்வை மேற்கொண்டு திறமையை வெளிக்காட்டிய மட்டக்களப்பு சென் சிசிலியா தேசிய பாடசாலை மாணவி நிரோஷா ஞானப்பிரகாசம் மற்றும் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மொடன் ஆட் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி மாணவன் எஸ். பிரணவன் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாநகர வரியிறுப்பாளர் சங்கத்தினரால் மாதமொருமுறை வெளிவரும் பாடும்மீன் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் எஸ். பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுங்சழியன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் இணைப்பாளர் பேட்டி பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் அருட் சகோதரர் கை.இராஜேந்திரம் வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி மற்றும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பிளர் பிரின்ஸ் காசிநாதர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

மாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகாரங்களையோ பலவீனப்படுத்தும் எம்முயற்சியையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரிக்காது.


பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகஞ்; செய்யப்பட்ட மாகாண சபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. 13ஆவது அரசியல் அதிகாரம் குறித்து இனவாத நோக்குடன் தென் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பிரச்சாரங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன,; இம்முயற்சியானது, இயல்பு நிலையின் ஊடாக நிலையான சமாதானத்தை அடையும் உன்னத நோக்கத்தை சீர்குலைத்துவிடும். இதனால் மாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அதிகாரத்தையோ பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஆதரிப்பதில்லை என்பதுடன், அதற்கு எதிராக தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனும் ஏனைய ஒருமித்த கருத்துடையவர்களுடனும் இணைந்து பணியாற்றுவது எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று(16.06.2013) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த காலம் தொட்டு மாகாண சபையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் அடிப்படை அலகாக ஏற்றுக் கொண்டு அதனூடாக முன்நோக்கி பொருத்தமான அரசியல் தீர்வினை எய்த வேண்டும் என்ற கோட்பாட்டில் செயற்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2008ம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையில் அமையப்பெற்ற கிழக்கு மாகாண சபை நிகழ்ச்சி நிரலில் 13 ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாகப் பெறுவதனை முன்னிலைப்படுத்தி செயலாற்றி வந்தது.
ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 13ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாக பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிரதானமான தமிழ் கட்சிகள் ஆதரவினை நல்க வில்லை என்பது கசப்பான உண்மையாகும். 13ஆவது அரசியல் அதிகாரத்தினை பாதுகாப்பதிலிருந்து தவறியதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள பங்கு கணிசமானது.
2008ம் ஆண்டு காலப் பகுதியில் எமது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கப் பெற்றிருந்தால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப் பகுதியிலேயே அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் வெற்றி கண்டிருக்க முடியும்.
எமது சமூகத்தின் துரதிஸ்ட வரலாற்றுப் பக்கங்கள் போன்று பொருத்தமான தருணத்தில் ஒன்றிணைந்து செயற்படாமல் இழந்து விட்ட பிறகு இணைந்து பெற்றிருக்கலாம் என்று வருத்தப்படுகின்ற தருணம் மாகாண சபை முறைமைகளுக்கோ 13ஆவது அரசியல் அதிகாரங்களுக்கோ ஏற்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
அதே நேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இன்றைய அரசாங்கம் கடினமாகப் பெற்றுக் கொண்ட நாட்டின் சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்கு இடமளிக்காது என்பதனை உறுதியாக நம்புகின்றோம். அந்த வகையில் 13ஆவது அரசியல் அதிகாரம் தொடர்பில் பங்காளி கட்சி என்ற வகையில் எமது கருத்துக்களுக்கும் அரசாங்கம் உரிய மதிப்பளித்து தெற்கு இனவாதிகளையும் வடக்கு குறுந்;தேசிய அரசியல் தலைமைகளையும் தோற்கடிக்கும் என திடமாக நம்புகின்றோம்.
பூ. பிரசாந்தன்
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
 
»»  (மேலும்)

6/15/2013

| |

தோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி. ஸ்ரீதரன் (சுகு) பத்மநாபா ஈபிஆர்எல்எப் (நினைவஞ்சலி)

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது.
சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் இரட்சகர்கள்? சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கி பிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.
இதனால் இலங்கையில் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மோசமடையும் நிலை தோன்றியுள்ளது.
மக்களின் சுதந்திரமான வாழ்வின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
இந்த நிலையில்தான் தன்னலமில்லாத சமூக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் அத்தகைய தலைவர்கள் எமது சமூகத்தில் அரிதிலும் அரிதாகிவிட்டர்கள் என்பதை அடித்துச் சொல்ல முடியும் ஒரு சில தலைவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை செவி மடுப்பவர்கள் சமூகத்தில் மிக மிகக்குறைவு.
ஆனால் குற்றுயிரான சமூகத்தை மரணிக்கச் செய்து வாழ முனையும் பிரகிருதிகள் இருக்கவே செய்கிறார்கள்..
இந்த இடத்தில் தான் தோழர் சுபத்திரன் – ரஞ்சன் – றொபேட் இன் பங்களிப்பு உணரப்படுகிறது. நட்பும், தோழமையும், ஜனநாயகமும், அஞ்சாமையும், அர்ப்பணமும் அவரது அருங்குணங்கள்.
புலிகள் கோலோச்சிய காலத்தில் 1997-2002 வரை யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினராக இருந்து கொண்டு மரண இருளில் வாழ்ந்து கொண்டு ஜனநாயகத்;தின் கூறுகளை இயகுவிக்க சக உறுப்பினர்களுடன் சேர்ந்து முயற்சித்தவர்.
அன்றைய யாழ் மாநகர முதல்வர் செல்லன் கந்தையன் தலைமையில் மறுநிர்மாணம் செய்யப்பட்ட யாழ் நூலகத்தை மீளத் திறப்பதற்கு பாடுபட்டவர்.
ஜனநாயகத்தின் பால் அவருக்கிருந்த அக்கறைக்காகவே அவர் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
பலருடைய அர்ப்பணிப்பில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டியிருந்தது. ஜனநாயகத்தை முழுமை பெறச்செய்யும் பணியில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இராணுவ மயமாக்கல் கலாச்சார
ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் பாசிச அரசியலின் சாயலிலிருந்தும் விடுபட வேண்டும்.
அதற்கு குறைந்த பட்சம் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான அர்த்த பூர்வமான அரசியல் அதிகார அலகுகள் வேண்டும்.
பல்லின சமூக நாடாக இலங்கை மாறுவது மாத்திரமல்ல. அநீதியான சமூக அமைப்பு எல்லாவற்றிலுமே தீவிரமான மாற்றங்கள் தேவை.
தோழர் றொபேட் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும், பாசாங்கு தனங்களுக்கும் எதிராகவே செயற்பட்டார். கலை இலக்கிய ஈடுபாடும் அவரிடமிருந்தது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை விளங்கிக் கொள்ள முற்பட்டவர்.
சோவியத் யூனியனின் வீழ்சிக்கு பின்னரான உலக நிலைமைகள் பொதுவுடைமை இயக்கத்தின் எதிர்காலம், இயக்கவியல் பற்றிய விவாதங்களில் ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவர்.
1980களின் நடுப்பகுதியில் அவர் சிறையில் இருந்த போது ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள. அவரின் நேர்மை, வசீகரம், ஆளுமை, கவித்துவம் எனபன இயல்பாகவே அதனை ஏற்படுத்தியிருந்தன.
தி. ஸ்ரீதரன் சுகு
பத்மநாபா ஈபிஆர்எல்எப்
»»  (மேலும்)

| |

சட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப்பி வைப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வுக்கு படகுகள் மூலம் பயணித்தவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் திட்டத்தின் கீழ் இதுவரை 30 விமானங்களில் இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கோனர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரை 1247 இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1035 பேர் பலவந்தமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியிருந்தன. இதில் பயணித்த எவரையும் உயிருடன் மீட்கமுடியாது போனதாக அவுஸ்தி ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் கடலில் மூழ்கிய படகொன்றில் பயணித்தவர்கள் இலங்கையர்கள் என்ற சந்தேகம் எழுப்பியுள்ளது. இது தொடர்பிலான விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப் பொதுக்கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலை; புலிகள் கட்சியின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2013ம் திகதி லேக் வீதியில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதென கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/14/2013

| |

'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது' -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.
இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.
»»  (மேலும்)

6/12/2013

| |

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு"

இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி பற்றிய முன் அறிவிப்பு
"வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு"
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வெலிக்கடைச்  சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவை யொட்டிய  நிகழ்வை எதிர்வரும் யூலை மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் நிகழ்த்த உள்ளது.

 இந்நிகழ்வில் வெலிக்கடைச்  சிறைப் படுகொலையின்  நினைவுகள், அரசியற் காரணங்களால் விசாரணை  இன்றி  சிறை வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலமைகள், மற்றும்  இன்றைய  இலங்கை அரசியல் குறித்த உரைகளும் இடம்பெறவுள்ளன.

 நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு :
10 rue Labat, 75018 Paris / Tளூl: +33 (0) 7 51 41 33 05 / centre.solidarite.srilankais@gmail.com
facebook : Centre De Solidarite Des Srilankais
http://srilankais.blogspot.fr
»»  (மேலும்)