5/06/2013

| |

இந்த அமெரிக்காவிடம்தான் தமிழ் தலைமைகள் நீதி கேட்டு தவங்கிடக்கின்றன

குவன்தனாமோ உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் பிரிட்டன் கைதி விபரிப்பு

உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு குரோதத்துடன் நடத்துவதாக கடிதம்
அமெரிக்காவின் குவன் தனாமோ சிறைச்சாலையில் இருக்கும் ஒரே பிரிட்டன் நாட்டவரான 44 வயதான ஷாகிர் ஆமிர், அங்கு நிகழும் துன்புறுத்தல்கள் குறித்து விபரித்துள்ளார்.
குவன்தனாமோ பே சிறையிலிருக்கும் நூறுக்கும் அதிகமான கைதிகள் கடந்த பெப்ரவரி நடுப்பகுதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆமிரும் இணைத்துள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து பிரிட்டன் சஞ்சிகையான டெய்லி மெயிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தேன். ஏற்கனவே பல சுகாதார பிரச்சினைகளால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் எனது முழங்காலில் தொடர்ந்தும் வலியை உணர்கிறேன். எனது இடுப்பின் பின்புறமும் தாக்குதலால் இருமுறை காயமடைந்தது. இங்கு இருக்கும் நீர் குழாய்களில் வரும் மஞ்சள் நிற தண்ணீரை குடித்து வருவதால் எனது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரும்பு வலையத்தை நாள்தோரும் அணிவதால் எனது கணுக்கால்கள் வீங்கி இருக்கின்றன. அறையெங்கும் குழாயூடாக வரும் தண்ணீரால் ஈரலிப்பாக இருப்பதால் காலுறையு டனேயே இருக்க வேண்டியுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது தொடக்கம் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கிறது. முன்னர் என்னை மோசமாக கவனித்தார்கள். ஏப்ரல் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின் நான் மேலும் குரோதத்துடன் பார்க்கப்படுகிறேன்.
எனது மருத்துவ பொருட்களை எடுக்க ஆரம்பித்தார்கள். வாத நோய் காரணமாக இரு போர்வைகளை பயன்படுத்தி வந்தேன். அவை இப்போது இல்லை. எனது பல் துலக்கும் கருவி, பாதணி, எனது சட்ட ஆவணங்கள் எல்லாம் போய்விட்டன. இப்போது சுவரில் வரைந்த எனது குழந்தைகளின் படத்தை மாத்திரமே விட்டுவைத்திருக்கிறார்கள்.
இப்போது நான் தனியாக விடப்பட்டிருக்கிறேன். கொன்கிரீட் சுவரில் தூங்குகிறேன். சிறை அறையின் உணவு வழங்கும் சிறு துளையையும் நிரந்தரமாக மூடிவிட்டார்கள்.
நான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இங்கு தரும் உணவுகள் அருவருப்பானவை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக உண்ணாமல் இருந்து அருகில் உணவு பரிமாறுவது மோசமான துன்புறுத்தல்.
ஷாகிர் ஆமிர் கடந்த 11 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் பதியப்படாமல் குவன்தனாமோவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இரு முறை இவரை விடுவிக்க முன்வந்தபோதும் அவருக்கு சவூதிக்கு மாத்திரமே செல்ல முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டதோடு அங்கும் அவர் சிறை வைக்கப்பட வாய்ப்பு இருந்தது. அங்கு அவரது பிரிட்டன் மனைவி ஸின் மற்றும் 5 குழந்தைகளிடம் இருந்தும் பிரித்து வைக்கப்பட நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆமிர் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நான் இங்கு மரணித்து விடுவேனோ என்று சிலவேளைகளில் பயப்படுகிறேன். அப்படி நடக்காது என நான் நம்புகிறேன். நான் ஒரு கொள்கைக்காகத்தான் இருக்கிறேன் என்பதை எனது குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறைக் கைதிகளுக்கும் பத்து காவலர்கள் இருக்கிறார்கள். இங்கு தடுத்து வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் அவர்கள் ஆண்டு தோறும் தலா ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவு செய்கின்றனர்.
அமெரிக்காவின் ஏனைய சிறைச் சாலைகளை விடவும் இங்கு 40 மடங்கு செலவு மற்றும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எதற்காக? நாம் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு தலைவலிதான் மிச்சம்.
என்னைப் போன்று இங்கு சுமார் 239 பேர் இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களுக்கும் பெயர் இல்லை.
அவர்களின் இலக்கங்களை எழுதியே தெரிந்துகொள்கிறேன் என்றும் அவர் விபரித்துள்ளார்.
குவன்தனாமோ சிறைச்சாலையில் உண்ணாவிரதம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மேலதிக மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மேற்படி சிறைச்சாலை நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பாக இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதனை மூடுவதற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கியூபாவில் இருக்கும் குவன்தனாமோ பே சிறையில் பல நாடுகளிலும் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.