5/09/2013

| |

மக்கள் போராட்டம் வென்றது

வெருகல், முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்திலிருந்து நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியைகள் இருவரும் இடமாற்றத்திற்கு எதிரான ஊர் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தையடுத்து மீண்டும் இன்று புதன்கிழமை அதே பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அண்மையில், பட்டதாரிகள் நியமனத்தின் கீழ் வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் இருவரும் கடந்த திங்கட்கிழமை, வலயக் கல்வி அதிகாரியினால் அங்குள்ள வேறொரு பாடசாலைக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தில் ஏற்கெனவே 12 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்ற நிலைமையிலேயே கடமையில் இருந்த ஆசிரியர்களில் இருவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இதனைக் கண்டித்து நேற்று; செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பெற்றோரால் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்த வலயக் கல்வி அதிகாரி, ஆசிரியைகள் இருவருக்கும் தன்னால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்துச் செய்து மீண்டும் பழைய பாடசாலைக்கே அனுப்பி வைப்பதாக பெற்றோரிடம் எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியைகள் இருவரும் நேற்று புதன்கிழமை காலை துவாரகா வித்தியாலயத்திற்கு வந்து கடமையேற்றதாக  பாடசாலை அதிபர் ரீ. சொக்கலிங்கம் தெரிவித்தார்.