கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோறளைப்பற்று கோட்ட அதிபா்கள் சங்கம் பின்வரும் அறிக்கையினை எழுத்து மூலம் வெளியிட்டுள்ளது.
அனுபவமிக்க,திறமையான, செயல்திறன் கூடிய எமது புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் கல்குடா கல்வி வலயம் தற்போது துடிப்புடன் இயங்கிவருவது குறித்து கல்குடா வலய கல்விச் சமூகமும் பொதுமக்களும் மகிழ்ச்சி கொண்டுள்ள அதேவேளை, எமது பிரதேசத்தின் கல்வியை சீரழிக்கும் முயற்சியில் திட்டமிட்டு செயற்படுகின்ற ஒரு சிலரின் செயற்பாடுகள் தொடர்பாக எமது பிரதேச சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும் என கோறளைப்பற்றுக் கோட்ட அதிபர்கள் சங்கம் வேண்டிநிற்கின்றது.
எமது வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக அண்மையழல் இணையத்தளமொன்றில் வெளியான செய்தி கல்குடா கல்வி சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலாகும். உயரிய பதவியில் உள்ள ஒரு மனிதரை அவமதிப்பதும் தவறான செய்திகளை வெளியிடுவதும் அவர் சார்ந்த சமூகத்தையே புண்படுத்தும் செயற்பாடாகும்.
ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் எனப்படுபவர் அவர் சார்ந்த பிரதேசகல்விச் சமூகத்தின் நேரடிப் பிரதிநிதியும் அச் சமூகத்தின் தலைவருமாவார். அந்தக்கல்விச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அவரைச் சார்ந்ததாகவே இருக்கும். அதற்காக பொருத்தமான முடிவுகளை எடுக்கவேன்டிய தேவையும் இருக்கும்.
சகல துறைகளிலும் பின்தள்ளப்பட்டுள்ள எமது கல்விவலயத்தை முன்கொண்டு செல்லவேன்டிய பாரிய பொறுப்பு தற்போதய வலயக்கல்விப் பணிப்பாளருக்கு உள்ளது. பல சவால்களுக்கு மத்தியில் பணிப்பாளர் அவர்கள் பல ஆக்கபூர்வமான கல்விசார்ந்த நடவடிக்ைககளை முன்னெடுக்கும்போது, பலர் அதனை வரவேற்று ஒத்துழைப்பு நல்கும் அதேவேளை , ஒருசிலர் தமது சுயநலன் கருதி அனாகரிகமான முறையில் செயற்படுவதையும் சிறுபிள்ளைத் தனமான தவறான முறையில் உண்மையற்ற செய்திகளை வெளியிட்டு சுயஇன்பம் காணும் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
எமது தற்போதய வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களின் தலைமையின் கீழ் கல்குடா கல்வி வலயம் ஔிமயமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நல்ல பல செயற்பாடுகள் பணிப்பாளர் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
1. பல வருடங்களாக கஷ்ட, அதிகஷ்ட பிரதேசங்களில் மன அழுத்தத்துடன் கடமையாற்றுகின்ற அதிபா், ஆசிரியா்களுக்கு உரிய முறையில், இடமாற்றம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் ஒரேபாடசாலையில் பல வருடங்கள் கடமையாற்றுகின்ற ஆசிரியா்களை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை. இதன் உண்மைத்தன்மையை சம்மந்தப்பட்டவா்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
2.பாடசாலைகளின் கட்டமைப்பைச் சீா்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை.
3. குறுகிய காலத்தினுள் வலயக்கல்வி அலுவலகத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றியுள்ளமை.
4. அதிபா் , ஆசிரியா்கள் , பெற்றோர் போன்றோர் தன்னைச் சந்திப்பதை இலகுபடுத்தியுள்ளமை.
5. பாடசாலையின் பௌதிக மற்றும் மனிதவளங்களைப் பெற்றுக் கொள்வதில் அக்கறையுடன் செயற்படுகின்றமை.
6. எப்போதும் மாணவா் நலன் சார்புடைய நல்ல முடிவுகளை எடுக்கின்ற பண்பினைக் கொண்டுள்ளமை.
7. மாணவா்களின் கல்வி தொடா்பாக பயனுள்ள திட்டங்களை வகுத்து செயற்படுத்துகின்றமை.
8. அதிபா்கள் , ஆசிரியா்கள் சுதந்திரமாக தமது கடமைகளைச் செய்ய அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளமை.
9. ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய , போதுமானளவு ஆசிரியா்களை நியமனம் செய்ய , உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை.
10. ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அதிபா் , ஆசிரியா் கூட்டங்களை நடத்துகின்றமை.
தவறான அறிக்கைகளை வெளியிடுவா்கள் மேலுள்ள நல்ல பல திட்டங்கள் தொடா்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அண்மைக்காலமாக எமது வலயக்கல்விப்பணிப்பாளா் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, உண்மைக்குப் புறம்பான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு, எமது பிரதேசத்தின் கல்வியைச் சீரழிக்க நினைப்பவர்களும், அவா்களது செயற்பாடுகளும் இனங்காணப்பட வேண்டும். இதற்காக சகல அதிபா்களும் ஆசிரியர்களும் பாடசாலைச் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
எனவே வலயக்கல்விப்பணிப்பாளரும் அவா்சார்ந்த அதிகாரிகளும் திட்டமிட்டு செயற்படுகின்ற ஒருசில விஷமிகளின் செயற்பாடுகளினால் மனஞ்சலிக்காமல், கல்குடா கல்வி வலயம் கல்வியில் பல சாதனைகள் படைக்க ஆக்கபூா்வமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்குப் பக்கபலமாக கோறளைப்பற்றுக் கோட்ட அதிபா்களும் ஆசிரியா்களும் பாடசாலை சார்ந்த சமூகமும் உங்களோடு ஒன்றுபட்டு நிற்கும் என கோறளைப்பற்று அதிபா்கள் சங்கம் உறுதி கூறுகின்றது.
" நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் செயலுருப் பெறும் "
அதிபா்கள் சங்கம்
கோறளைப்பற்றுக் கோட்டம்
கோறளைப்பற்றுக் கோட்டம்