மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கலை,கலாசார நிகழ்வுகள்,நடைபெறும் சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ் தொலைக்காட்சிகள் இலங்கையில் உள்ளபோதும் மட்டக்களப்பின் நிகழ்வுகள் பெரும்பாலும் இருட்டடிக்கப்பட்டே வந்திருக்கின்றது.
இந்நிலையில் உலகலாவிய ரீதியிலும் வடக்கின் அனைத்துப்பகுதியிலும் தமது சேவையை மேற்கொண்டுவரும் டான் தொலைக்காட்சி சேவை நிலையம் இந்த மட்டுஒளி தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.
ஆஸ்க் கேபிள் விசனின் ஒரு அங்கமாகவுள்ள மட்டுஒளியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. ஆஸ்க் கேபிள் விசனின் தலைவர் குகநாதன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்பவிழாவில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் , மற்றும் படை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆஸ்க் கேபிள் விசனின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.
ஆஸ்க் கேபிள் விசன் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் ஊடக அமைச்சு, தகவல் திணைக்களம் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டு கேபிள் மூலமாக இதனை பயன்பெறும் வகையில் ஒழுங்கமைத்துள்ளதாக அதன் ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மக்கள் கடந்த காலங்களில் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த சேவையை இங்கு ஆரம்பித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கேபிள் தொலைக்காட்சி சேவையூடாக இந்த மட்டுஒளியை கண்டுகளிக்கலாம் என தெரிவித்த தலைவர், தற்போது மட்டக்களப்பு நகரம் மற்றும் இருதயபுரம் தொடக்கம் முகத்துவாரம் பகுதியான அனைத்துப்பகுதிகளிலும் மற்றும் கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளிலும் இதன் சேவைகள் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
தற்போது கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலையூடாக இதன் இணைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றன. களுதாவளை வரையில் இதன் இணைப்பு சேவை கல்லாறில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமைபெறுமிடத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் கேபிள் சேவை ஊடாக மட்டு.ஒளியை கண்டுகளிக்கலாம் என ஆஸ்க் கேபிள் விசன் தலைவர் குகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பான சேவைகளை பெறவிரும்புவோர் எமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த அவர் தங்களது பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுஒளியில் காண விரும்பினால் அலுவலகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் எமது செய்தியாளர்கள் அந்த நிகழ்வை பதிவுசெய்து ஒளிபரப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.