5/02/2013

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்ட மேதினம்

கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் தனித்துவக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது, மிகவும் பிரமாண்டமான முறையில் எந்தவொரு கட்சியும் செய்யாதவகையில் இன்று தொழிலாளர் தின நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தியிருந்தது.  
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்களின் ஏற்பாட்டிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பாக மே தின நிகழ்வுகள் நடைபெற்றன.
மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டிகள், பேருந்துகள், உழவு இயந்திரங்கள் ஆகியவற்றின் பவனியுடன் பெருமளவிலான தொழிலாளர்கள், கட்சியின் தொண்டர்கள் சகிதம் செங்கலடி சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது சுமார் 16 கிலோமீற்றர் தூரம் மட்டு திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு ஸ்ரீலங்கா டெலிகொம் சந்தியை அடைந்தது. அங்கிருந்து தொழிலாளர்கள், தொண்டர்கள் கால்நடையாகச் சென்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை அடைந்தனர். தேவநாயகம் மண்டபத்தில் மேதின கூட்டம் பல்வேறு முக்கியஸடதர்களின் உரைகளுடனும், கலைநிகழ்வுகளுடனும் நடைபெற்றது.
'அதிகாரப் பரவலாக்கலுக்கூடாக மாகாண சபைகளை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் தேவநாயகம் மண்டபத்தினுள் இடம்பெற்ற மேதின கூட்ட நிகழ்வுகளில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் அவர்களினால் தலமையுரை இடம்பெற்றது. தலைமையுரையில் 'தொழிலாளர்களின் வீண் செலவுகள் குறைக்கப்படவேண்டும்' என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அசாத் மௌலான அவர்களினால் நிகழ்த்தப்பட்ட மேதின கொள்கை விளக்க உரையில் 'இன, மத, வகுப்பு பேதமற்ற அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வழங்கப்படவேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டதுடன்,'பேரினவாதம் வளர்வதற்கு சிறுபான்மையினரும் அடிப்படையாக அமைந்துவிடக்கூடாது' என்ற கருத்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேதின நிகழ்வுகளில் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. தனது சிறப்புரையில் 'அதிகாரப் பரவலாக்கலுக்கூடாக மாகாணசபைகளைப் பலப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் உரையாற்றியதுடன்,'தமது கட்சியானது கிழக்கு மாகாண சபை மாத்திரமன்றி ஏனைய மாகாண சபைகளின் அதிகார பரவலாக்கலுக்கும் தொடர்ந்தும் குரல்கொடுக்கும்' என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
மேதின நிகழ்வுகளை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பித்திருந்தன. எழுச்சிபூர்வமானதாகவும், கருத்தாளம் உடையதுமான நடன நிகழ்வுகள் பல இடம்பெற்றன.  அந்தவகையில் எஸ் கிருஸ்ணகாந்தன் ஆசிரியர் அவர்களின் நெறியாள்கையில் செங்கலடி வேவ்  ஸ்ருடியோ நடனபாடசாலை மாணவர்களினால் சிறந்த முறையில் ஓர் எழுச்சி நாடகமும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி திருமதி துஸ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஸ் அவர்களின் நெறியாள்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின்மாணவர்களினாலும் 'கிருஸ்ணலீலா' நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இறுதியாக தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவர் அவர்களினால் தொழிலாளர்கள்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், க.மோகன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களினாலும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
கிழக்கிலங்கையிலே எந்தவொரு அரசியல் கட்சியும் தொழிலாளர் தினத்தை சிறப்பாக கொண்டாத இந்தவேளையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினாது எந்நேரமும் மக்களுக்காகவே என்பதனை நிரூபிக்குமளவிற்கு தன்னால் இயன்றவரையில் இந்த மேதின நிகழ்வினை சிறப்பாக செய்துமுடித்தள்ளது.
அரசுடன் இணைந்து அபிவிருத்தியை மாத்திரம்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்கின்றது என்ற கருத்தினை பொய்ப்பிக்கச் செய்ததுடன், அபிவிருத்தி மட்டுமன்றி சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அதிகாரத்திற்கும் குரல்கொடுக்கும் ஒரே ஒரு தனித்துவக்கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதனை இந்த மேதின நிகழ்வுகள் பறைசாற்றியுள்ளன என்றால் அது மிகையில்லை.