5/01/2013

| |

கலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்டவேண்டியவனாய் இருக்கின்றேன்.


 கடந்த வாரம் கொழும்பில் மூவின மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியும் தீவிர மதவாதிகளின் அராஜகத்தை எதிர்த்தும் கொழும்பு தாமரை தடாக சந்தியில் இனங்களுக்கிடையில் ஒற்றுமைக்கான முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலமும் பொதுகூட்டமும் இடம்பெற்றது. இந்த முன்னணிக்கு தலைமை தாங்கியவர் வணக்கத்துக்குரிய கலாநிதி வத்தேகம சமித்த தேர ஆவார். 1966 இல் இருந்து நானும் சமித்த தேரரும் ஒன்றாக வத்தேகம சிறிரத்னசாராவில் கல்விகற்கும் காலத்திலேயே நண்பர்களாக இருந்தோம். சமித்தர் நல்ல மனிதர், நல்ல நண்பர். அரசியலில் ஆர்வம் மிகவராகவும் ஒரு இடதுசாரி சிந்தனையாளராகவும் லங்கா சமாசாமாஜா கட்சியின் உறுப்பினராகவும் தன்னை வெளிப்படுத்தியவர். இடவரிடம் சாதிவாதம் மதவாதம் இனவாதம் கிடையாது. இதனால்தான் 1994 இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் வத்தேகம பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு சென்றார். யுத்தகாலத்தில் சகலமதங்களையும், இனங்களையும் உள்ளடக்கிய சமாதான குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றவர். தமிழ் மக்களுக்கான உரிமை விடயத்தில் மிகவும் காட்டமாக ஆதரவைத் தெரிவிப்பார். தற்போது காலி மாவட்டத்திற்கான மாகாணசபை உறுப்பினராகவும் இருக்கின்றார். 2011 சித்திரை மாதம் 20 ஆம் திகதி பிரான்சுக்கு வந்த சமித்த தேரர் என்னுடன் தொடர்பு கொண்டதுடன் எனது இல்லம் வந்து பல பழையவிடயங்களை நினைவ+ட்டி மகிழ்ந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்தபோது “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்பார்கள் அல்லவா? தொடரும் அவருடனான எனது நட்பு கடந்த வாரம் கொழும்பில் அவர் மேற்கொண்ட இன ஐக்கியத்திற்கான ஊர்வலமும், கூட்டமும் அவர் ஆற்றிய உரையும் என்னை பெரிதும் அவர்மீது மதிப்பை உண்டாக்கியது. அவரோடு நான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவரும் எனது குரலைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நானும் இன ஐக்கியம் சார்ந்து முடிந்தவரை குரல் கொடுப்பவன் என்றவகையிலும்  நாம் இலங்கையர்  என்பதிலும் பெருமையடைபவன் என்ற  வகையில் கலாநிதி வத்தேகம சமித்த தேரரின் செயல்பாடுகளை பாராட்டவேண்டியவனாய் இருக்கின்றேன். எமது நாட்டின் இன ஐக்கியத்திற்காக தேரர் போன்ற பலரின் தொடர்பும் உறவும் இன ஐக்கியத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நம்புவதினால் இச்சிறு பதிவை வாசகர்களுடன்  பகிர்கின்றேன். 

இ.யோகரெட்ணம்.