சர்வதேசம் மந்தமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு
சோமாலியாவில் 2010 முதல் 2012 வரை இடம்பெற்ற பஞ்சம் காரணமாக சுமார் 260,000 மக்கள் கொல்லப்பட்டதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பாதிப்பேர் 5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஐ. நா. உணவு நிறுவனம், அமெரிக்காவின் பஞ்ச எச்சரிக்கை முறை தொடர்பான நிதியம் இணைந்து வெளியிட்ட அறிவிப்பிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 1992 ஆம் ஆண்டு பஞ்சத்தில் கொல்லப்பட்ட 220,000 பேரை விடவும் தற்போதைய கணிப்பு அதிகமாகும்.
சோமாலியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தமும் இந்த நெருக்கடி நிலையை மேலும் மோசமடையச் செய்தது.
எவ்வாறாயினும் இந்த அனர்த்தம் குறித்து முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடப்பட்டதாக ஐ. நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் சிரேஷ்ட கணக்கியலாளர் மார்க்சி முல்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ. நா. கடந்த 2011 ஜூலையில் சோமாலியா பஞ்சம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரித்தது. சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழுவான அல் ஷபாப் கட்டுப்பாட்டிலிருக்கும் தெற்கு பகூக் மற்றும் ஷபல் பிராந்தியத்திலேயே முதல் பஞ்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த ஆயுதக் குழு மேற்கு நாடுகளின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்தது.
பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் பஞ்சம் பரவியது. அதில் மத்திய ஷபல் மற்றும் அல்கொயின் பகுதிகளிலும் பஞ்சம் பரவியது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் மொகடிஷ¤வில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டது.
இதில் சோமாலியாவின் மொத்த சனத்தொகையில் 4.6 வீதத்தினரும் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 10 வீதத்தினரும் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் பஞ்சம் காரணமாக பலியாகி இருப்பதாக மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பஞ்சம் குறித்த பிரகடனம் வெளியிடப்படும் முன்னரே நாம் செயற்பட்டிருக்க வேண்டும் என சோமாலியாவுக்கான ஐ. நாவின் மனிதாபிமான இணைப்பாளர் பிலிப் லசரினி குறிப்பிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டிலேயே அனர்த்தம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆபிரிக்காவில் 2011 இல் ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் சோமாலியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஐ. நா. பஞ்சம் குறித்த பிரகடனத்தை 2012 பெப்ரவரியிலேயே வெளியிட்டது.
பஞ்சம் குறித்து முன்னெச்சரிக்கை விடப்பட்டபோதும் சர்வதேச சமூகம் மந்தமாகவே செயற்பட்டதாக ஐ. நா. குற்றம் சாட்டியுள்ளது.