(ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென் மாகாண சபை உறுப்பினர் – பத்தேகம சமித தேரருடன் “ஜனரல” பத்திரிகை நடத்திய நேர்காணல்) -
தமிழில் ஏ எம். எம் முஸம்மில்-
ஜனரல :- தேரரே, நாட்டில் தற்போது மேலோங்கியிருக்கும் இனவாதம், மதவாதம் பற்றி உங்கள் கருத்து என்ன ?
சமித தேரர் :- இது மிகவும் பிழையானதொரு நிலைமை என்பதே எனது கருத்தாகும். இந் நிலைமை நாட்டிட்குகந்ததல்ல. இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும் .ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தை பார்த்து கர்ஜிக்க முடியாது. தற்போது நடந்துகொண்டிருப்பது பிழையானதொரு முன்னுதாரணமாகும்.
ஜனரல :- பல்லின சமூகமொன்றில் பிரதான சமூகம் என்று கருதப்படக்கூடிய ஒரு சமூகத்திற்கு முக்கியத்துவமளிக்கபட வேண்டும் அல்லது அவர்களுக்கு கூடுதல் இடமளிக்கப்படவேண்டும் என்றதொரு நிலைபாடுள்ளதா ?
சமித தேரர் :- எந்தவொரு சமூகத்திலும் அப்படியிருக்க கூடாது. மனிதர்கள் எவ்விடத்திலும் சமமானவர்களே. அந்த சம உரிமை எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டியதே. பிரச்சினைகளிருந்தால் பேசித் தீர்கப்படவேண்டும் .
ஜனரல :- நீங்கள் இவ்வாறு கூறினாலும் சிலர் சந்தி சந்தியாக கூட்டங்களை நடாத்திக்கொண்டு இனத்தை பற்றியும் மதத்தை பற்றியும் மிகவும் ஆக்ரோஷமாக கருத்துக் கூறுகிறார்களே …
சமித தேரர் :- நான் நினைக்கின்றேன் நீங்கள் “ பொது பல சேனா “வை பற்றி கூறுகின்றீர்கள்
ஜனரல :- ஆம் ,அவர்களை பற்றியும் கதைப்போம் .
சமித தேரர் :- “ பொது பல சேனா ” என்பவர்கள் இந்த சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அதே வேலை இந் நாட்டிற்கு புதிதாக குடிபெயர்ந்துள்ளதொரு அமைப்பாகும், அவர்களின் நடவடிக்கைகள் “அல் கைதா” வினரை ஒத்ததாக உள்ளது . இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. ஆகவே சம்பிரதாயதிற்கு முரணாக வன்செயலை தூண்டி தீவிரமாக செயற்படகூடிய இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
ஜனரல :- நீங்கள் இவர்களை அல் கைதாவினர் போல் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் , இவ்வமைப்பிலும் முன்னணியில் செயற்படுபவர்கள் பிக்குகள் சிலரல்லவா…?
சமித தேரர் :- ஆம் தெளிவாகவே இவர்கள் சம்பிரதாயதிற்கு முரணான கலகக்காரர்கள் தான் .
ஜனரல :- அப்படியென்றால் “ பொது பல சேனா ” வினர் கலகக்காரர்கள் .?
சமித தேரர் :- ஆம் தெளிவாகவே
ஜனரல :- ஆனாலும் இச்சமூகம் இவர்களை புறக்கணிக்கவோ ஏற்றுக்கொள்ளாமலோ இல்லையே ….
சமித தேரர் :- இல்லை , இந்நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அந்தஸ்துள்ளவர்கள் இவர்களை புறக்கணித்தே உள்ளார்கள் . மல்வத்து மகாநாயக்க தேரர்கள் , கெலனி விகாரையின் நாயக்க தேரர் ,இத்தே பான நாயக்க தேரர் போன்ற இந்த நாட்டின் முக்கிய தேரர்கள் இவர்களை புறக்கணித்துள்ளார்கள். பௌத்த சமூகத்திலுள்ள உண்மையான பௌத்தர்கள் இது போன்றவர்களை சுற்றி அணிதிரள மாட்டார்கள் . இனவாதிகள் சிலபேர்தான் இவற்றை செய்கிறார்கள் .இவற்றை கவர்பவர்களும் இனவாதிகள் தான் . இது போன்ற இனவாத செயற்பாடுகள் கொஞ்ச காலத்திற்கே தாக்கு பிடிக்கும் .
ஜனரல :- எவ்வாறாயினும் , பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், இந் நாட்டில் அடிப்படைவாதம் செயற்படுவதாகவும் கூறுகின்றார்கள் . அப்படியான அச்சுறுத்தலோ அடிப்படைவாதமோ இந் நாட்டில் செயட்பாட்டிலுள்ளதா ?
சமித தேரர் :- கடந்த காலநெடுகிலும் இவ்வாறான கதைகளை கூறினார்கள். தமிழ் அடிப்படை வாதமொன்றை பற்றி ஆரம்பத்தில் கூறினார்கள், அதன்பிறகு கிறிஸ்தவ அடிபடைவாதமொன்று உள்ளதாக கூறிக்கொண்டு ஹெல உறுமய போன்றவர்கள் தோற்றமெடுத்தார்கள், சோம தேரரை கொன்றதாக கூறினார்கள் , கத்தோலிக்க மயமாக்கள் செயற்திட்டமொன்று செயற்படுவதாகவும், பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதென்றும் அதற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்றும் பல கதைகளை கூறிக்கொண்டு தான் இவர்கள் வருவார்கள் , அதன் பின் பாராளுமன்றதிட்கு போவார்கள். அப்படி
கூறிக் கொண்டு சோம தேரரின் மரணத்திற்கு மேலால் பாராளுமன்றம் சென்றவர்கள் , பாராளுமன்றம் சென்ற பின் ஆகக் குறைந்தது சோம தேரர் மரணித்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்று கூட தேடி பார்கவில்லை . இவர்கள் பாராளுமன்றம் சென்ற பிறகு எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் . அதன் பிறகு மக்களை அச்சுறுத்தி தமக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் ஒரு போக்கையும் அண்மையில் நாங்கள் கண்டோம். நாட்டு மக்களை அச்சமூட்டி , பயமுறுத்தி தமக்கு தேவையான கலகமொன்றை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகுமென்றே நான் திடமாக நம்புகின்றேன் .
ஜனரல :- இனவாத , மதவாத செயற்பாடுகளும் இவர்களின் அரசியல் சம்பிரதாயத்தின் ஓர் அங்கமென்றா நீங்கள் கூற வருகின்றீர்கள் .
சமித தேரர் :- அவ்வாறான அறிகுறிகளே தென்படுகின்றன .
ஜனரல :- இது போன்ற பிரவேசங்கள் சக்திவாய்ந்ததாக காணப்படுவதாக எந்த அடிப்படையை வைத்து கூறுகின்றீர்கள் .
சமித தேரர் :- இரண்டு காரணங்கள் உள்ளன . ஒன்று தான் பாதுகாப்புச் செயலாளரின் நேரடி ஆதரவு இவர்களுக்குண்டு என்பதை ஆதாரத்துடன் நாம் கண்ணுற்றோம் . ஆகவே இந்த இனவாத கும்பல் அந்த நிழலில் இருந்து கொண்டே இவ் அநியாயங்களை செய்வதாகவே நாங்கள் காணுகின்றோம். ஏனென்றால் இந் நாட்டு மக்கள் உண்மையாகவே முகம் கொடுத்துள்ள பல பிரச்சினைகள் உள்ளன . இந் நாட்களில் மக்கள் முகம்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு போன்ற உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக வேண்டி, இது போன்ற தேவைக்கு உதவாத வேலைகளின் மூலம் மக்களின் எண்ணங்களை திசை திருப்பலாம் என்று அரசாங்கம் எண்ணுவதாகவே எனக்கு நினைக்க தோன்றுகின்றது . அநேகமாக அரசாங்கங்களின் சுபாவமும் இதுதான் . ஆனால் இது மிகவும் கெட்ட முன்னுதாரணமாகும். மிகவும்
தெளிவான விடயம் என்னவென்றால் நாங்கள் நாளுக்கு நாள் அராஜகத்தை எதிர் நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம்.
ஜனரல :- இன்னொரு புறத்தால் இஸ்லாத்திற்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் தற்போது பௌத்த விகாரைகளுக்குள்ளும் பரவியுள்ளது.?
சமித தேரர் :- இதுவும் இப்போதுள்ள மோசமான ஊழல்மிகுந்த சமூக அமைப்பில் காணப்படும் பாரதூரமான நோயறிகுறி ஒன்றேயாகும் . இறுதியில் இந்த நிலை மக்கள் மத்தியில் பாரியதொரு பதட்ட நிலையை தோற்றுவிக்கும் . விசேடமாக பௌத்த தர்மம் சமாதானத்தை வலியுறுத்தும் ஒரு மதமாகவே உலகத்தால் அறியப்பட்டுள்ளது . ஆனால் தற்போது நடைபெறும் விடயங்களால் பௌத்த மதத்தின் அடிப்படை அடையாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது , இந்த தீவிரவாத செயற்பாடுகளை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் . அதே போல் மிகவும் அவதானத்துடனேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது.
ஜனரல :- “ மிகவும் அவதானத்துடனேயே இப்பிரச்சினைகளை நாம் அணுக வேண்டியுள்ளது ” என்பதன் கருத்து இரண்டு பக்கங்களையும் அல்லது இரு பிரிவினரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதா.?
சமித தேரர் :- இந்த தருணத்தில், எந்தவொரு சமயத்திற்கோ , இனத்திற்கோ எதிராக அவதூறுகளை கூறவோ அவர்களின் சமய கிரியைகளை கொச்சை படுத்தவோ வேண்டாம் என்று பணிப்புரைகளை வழங்கவும் , தடைகளை ஏற்படுத்தவும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு அல்லது கடப்பாடுள்ளது. இந் நாட்டின் யாப்பின் மூலம் இது வலியுறுத்தப் பட்டுள்ளது. மறுபுறத்தில் எல்லா சமயத்தவர்களும் இன்னொருவருக்கோ அல்லது சமயத்திற்கோ இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும் . பிரச்சினைகள் கருத்து முரண்பாடுகள் தோன்றும் பொது அவற்றை பேசித்தீர்த்து கொள்ள வேண்டும் .
ஜனரல :- ஆனாலும் சந்திக்கு சந்தி நடைபெறும் மக்களை ஆத்திரமூட்டுகின்ற செயற்பாடுகளை தடுக்க வேண்டிய சவால்களை ஏற்க இதுவரை எவரும் முன்வர வில்லை. நாளுக்கு நாள் இவர்களை உற்சாகமூட்டும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன .?
சமித தேரர் :- நடைபெறும் இவ்விடயங்களுடன் எவ்வகையிலும் எனக்கு உடன்பட முடியாது. இவை துடைத்து எறியப்பட வேண்டும் . அப்படியல்லாமல் சுமுகமானதொரு நிலைமையை தோற்றுவிக்க முடியாது,
ஜனரல :- இனவாதமோ , மதவாதமோ அல்லது ஏதாவதொரு அடிப்படைவாதமோ , ஒரு அரசியல் “ப்ராஜெக்ட்” ஆக இருக்க முடியாதா ?
சமித தேரர் :- எது எவ்வாறு இருப்பினும் நடக்கும் இச்செயற்பாடுகள் அரச அனுசரணையுடன் நடப்பதாகவே தெரிகிறது, அரசாங்கத்தின் அனுசரணையின்றி இவ்வளவு தூரம் இவற்றை இவர்களால் செய்ய முடியாது, ஏனென்றால் இவர்கள் விடயத்தில் பாதுகாப்பு செயலாளரின் பங்களிப்பை நாங்கள் நேரடியாகவே கண்டுள்ளோம். நிச்சயமாக அது செய்யக்கூடியதொரு செயற்பாடல்ல. ஆனாலும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது .
ஜனரல :- அதாவது அரசியல் இலாபத்திற்காக ??
சமித தேரர் :- ஆம் இருக்கலாம் .
ஜனரல :- அப்படியென்றால் இந்த பிக்குகள் செய்வது அரசாங்கத்திற்கு தேவையானதை , பதட்ட நிலைமையை அல்லது கலகத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை அரசாங்கதிட்கே தற்போது ஏற்பட்டுள்ளது ?
சமித தேரர் :- எல்லோரும் இவ்வணியில் சேர மாட்டார்கள் இனவாதிகள் தான் இவர்களுடன் இணைந்து அனாவசிய செயற்பாடடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் . நுணுக்கமாக இவற்றை விளங்க வேண்டும் .
ஜனரல :- இவ்வாறு தான் ஒரு பௌத்தன் கூட இல்லாத பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவுகின்றார்கள் . சமய விரோதிகள் என்று கூறிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து மிரட்டுகின்றார்கள் . சமய நெறிகளின் படி உண்ணுவது குடிப்பது கூட இப்போது பிரச்சினையாக்கப்பட்டுள்ளது , இது பற்றி என்ன கூறுகின்றீர்கள் .
சமித தேரர் :- பௌத்த மதம் ஒரு ஆக்கிரம போக்கை கொண்டதொரு மதமல்ல. வரலாற்று நெடுகிலும் நாங்கள் பாவித்த ஒரே ஆயுதம்தான் “அறிவு”.எனும் ஆயுதம். மடமை,மூட நம்பிக்கைகளை தகர்தெரிவதே எங்கள் நோக்கமாக இருந்தது. எந்த சந்தர்பத்திலும் ஆக்ரம போக்கில் பௌத்த மதம் செயற் பட்டதில்லை.
இன்னுமொருவிடயத்தை சுட்டிக்காட்ட நினைக்கின்றேன் . பௌத்த சின்னங்களை தனிப்பட்ட குறிக்கோள்களுக்காக சிலர் உபயோகிக்கின்றனர் . இவ்வாறான வேலைகள் யார் செத்தாலும் தவறானதாகும் . இது மனித உரிமைகளுகெதிரான செயற்பாடுகளாகும். பௌத்த தர்மத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிகின்றேன் , பௌத்தபிக்கு சமூகத்திலிருந்து இவற்றை துடைத்தெரிய வேண்டும் . இவற்றை வளரவிடகூடாது . பௌத்தம் சம்பந்தமான சம்பூர்ண அறிவு இவர்களுக்கு கிடையாது . பொய்யான வாதங்களை முன்னிறுத்தி இச் சமூதாயத்தை சீரழிக்க வேண்டாம் என்று இவர்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்
ஜனரல :- என்றாலும் தேரரே ! நீங்களும் அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள், அரசாங்கத்தை பிரதிநிதிதுவபடுதும் அநேகமான இடதுசாரி கருத்துடையவர்களின் கூற்று,” நாங்கள் அரசாங்கதிற்குள்ளிருந்து கொண்டு இச்செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம்” என்பதாகும். ஆனாலும் இக்கூற்றுக்கள் வெறும் சொற்களாக மட்டுமே நாம் காணுகின்றோம் .
சமித தேரர் :- ஆம், இலங்கை சம சமாஜ கட்சியையே நான் பிரதி நிதிதுவப்படுதுகின்றேன் , கட்சியின் கருத்தையே நான் இப்போது முன்வைக்கின்றேன் . எங்களின் அரசியல் உயர் பீடம் அதற்கான அனுமதியையும் பொறுப்பையும் எனக்கு தந்துள்ளது . அதையே நான் இப்போது செய்கின்றேன்.
ஜனரல :- நான் உங்களிடம் கேட்பது உங்களின் தனிப்பட்ட பொறுப்பை பற்றி அல்ல . உங்களின் கூட்டன சமூகப் பொறுப்பை பற்றி .
சமித தேரர் :- நாங்கள் இருப்பது ஒரு கூட்டாட்சியில், ஒரு கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் போது சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில வேளைகளில் ஏற்படுவதை நான் ஏற்றுகொள்கிறேன் . சிலவிடயங்களில் எதிர் காலத்தில் இதைவிட சிந்தித்து தவறுகளை சரி செய்து கொண்டு செயற்படவேண்டிய தேவையுள்ள அதே வேளை ,நாசத்தை உண்டு பண்ணக கூடிய விடயங்களுக்கு எதிராகவும் செயற்பட வேண்டும் என்பதையும் நான் இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன் .
ஜனரல :- நீங்கள் கூறுவது போல் உங்களால் , “ சிலவிடயங்களை பிரதிநிதிதுவப்படுத்த முடியாத நிலைமைகள் சில வேளைகளில் ஏற்படுவதால்” நாட்டில் தற்போது செயற்படுத்தபடும் “நாசத்தை உண்டு பண்ண கூடிய விடயங்களுக்கு” ஒரு அங்கீகாரம் கிடைகின்றதல்லவா ?
சமித தேரர் :- இக்காரணி பொதுவாகத்தான் தாக்கம் செலுத்துகின்றது. 18 வது யாப்பு திருத்ததிற்கு நாங்கள் சார்பாகவே வாக்களித்தோம், ஆனால் கட்சிக்குள் அதற்கு பாரிய எதிர்புள்ளது. அதேபோல் தான் பிரதம நீதியரசரின் பிரச்சினையின் போது எங்களின் ஒரு உறுப்பினர் அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தார், அதே வேளை எங்களின் அமைச்சர் எதிராக வாக்களித்திருந்தார் . கூட்டாச்சியிளிருக்கும் போது இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும், வரையறைகளுக்கு கட்டுபடவேண்டியதுமான சந்தர்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது . விஷேடமாக பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட கதைக்க மாட்டார்கள் .மௌனம் காப்பார்கள் . இது மஹா நாயக்க தேரர்கள் மாத்திரம் கதைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று அநேகமானவர்கள் நினைகின்றார்கள் . எல்லோரும் ஓரணியில் சேர்ந்து எதிர்ப்பைகாட்டி ,ஆர்பாட்ட ஊர்வலங்களை நடத்தி இந்நடவடிக்கைகளை நாம் கட்டுபடுத்த வேண்டும் .
ஜனரல :- இந்த விடயத்தில் பிக்குகள் சமூகத்திற்கும் பாரியதொரு பொறுப்புள்ளதல்லவா ?
சமித தேரர் :- ஆம் அதனால் தான் நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் , மஹா நாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
ஜனரல :- ஆனால் இது தனித்திருந்து எதிப்பு தெரிவிப்பது போல் தெரிய வில்லையா ?
சமித தேரர் :- நான் முக்கியமான பல தேரர்களுடன் இதுவிடயமாக கதைத்துள்ளேன், கண்ணியமிக்க தேரர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்காக வெட்கப்படுகிறார்கள் , பேய் பிசாசுகளைபோல் நடந்துகொள்ளும் போது எவரும் பயபடுவார்கள் . நான் அப்படி கூறுவதால் இங்கு நடப்பவைகளை நியாயப்படுத்த வரவில்லை . அதே வேளை நான் இவர்களுக்கு எந்த வகையிலும் பயப்பட மாட்டேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், தைரியமாக முன் வந்து இவர்களின் செயற்பாடுகளை அடக்கிவிடவேண்டும் . என்னால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான் .
ஜனரல :- தேரரே , உண்மையில் இது சிங்களவர்களின் நாடுதானா ? இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான நாடா ?
சமித தேரர் :- இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான நாடு என்று சொல்வார்கள். ஆனால் லண்டன் நகருக்கு சென்று பாருங்கள், எத்தனை வகையான மொழிகளை பேசுபவர்களும், எத்தனை வகையான இனங்களை சேர்ந்த மக்களும் அங்கே வாழுகின்றார்கள் என்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும் . ஆனால் மூன்றே மூன்று இன மக்களே இங்கு வாழுகின்றார்கள் , அவர்கள் இரண்டு மொழிகளையே பேசுகின்றார்கள் .
இன்று ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமான நாடு என்று உலகில் எந்த நாடுமே இல்லை . மேன்மையாக வேண்டியதும் மேன்மையாக கருதப்படவேண்டியது மனிதர்கலல்லாமல் மதமோ இனமோ அல்ல .
-ஜனரல- ஆஷிகா பிராக்மன *நன்றி காத்தான்குடி .கொம்