முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய உள்ள முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில் மீண்டும் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இதற்கு ஆதரவான தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பே இதனை தடுக்காதே, உதயன் பத்திரிகையே இன,மத,பிரதேச வேறுபாடுகளை தூண்டி பத்திரிகை நடத்துவது தான் பத்திரிகை தர்ம்மமா?, ஊடகங்களே! நடு நிலையுடன் செயற்பட்டு இன,மத ஒற்றுமைக்கு உதவுங்கள், உரிமை கோறும் முஸ்லிம்கள் நாம்,வந்தேறு குடிகளல்ல, நாம் முல்லையின் பூர்வீக குடிகள், தமிழன் எமது சகோதரன்,முஸ்லிம் எமது உறவினர், முல்லை எனது தாயகம், இனவாதம், மதவாதம் பேசி முஸ்லிம்களை முல்லையிலிருந்து விரட்டியடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பே சதி செய்யாதே!, எந்த குற்றமும் செய்யாத எமது முஸ்லிம் சமூகம் மீள்குடியேறிவரும் போது அதனை தடுக்கின்றாயேஸ.தமிழ் தேசிய கூட்டமைப்பே உனக்கு மனசாட்சி தான் இல்லையா, நாங்கள் வந்தேறு குடிகளல்ல பூர்வீக முஸ்லிம் குடிகள் போன்ற வாசகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இவ்வார்ப்பாட்ட பேரணியின் நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளிக்கும் மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பின் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.