ஈரானின் அணு செயற்பாடு தொடர்பில் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.
கசகஸ்தானில் கடந்த இரு தினங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஈட்டப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கான பிரதானி கதரின் அஷ்டன் குறிப்பிட்டார். இரு தரப்பும் முரண்பட்ட நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் ஈரான் தனது யுரேனிய செறிவூட்டலை 20 வீதம் அளவுக்கு உயர்த்துவதை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டபோதும் தமது யுரேனியம் செறிவூட்டும் உரிமையை அங்கீகரிக்குமாறு ஈரான் கோரியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஈரானுடனான இந்த பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டனுடன் ஜெர்மனியும் பங்கேற்றன. ஈரான் தனது அணு செயற்பாடுகள் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க முற்படுவதாக மேற்கு நாடுகள் சந்தேகம் வெளியிடுவதோடு தாம் அமைதியான செயற்பாட்டுக்காகவே அணு சக்தியை பயன்படுத்துவதாக ஈரான் கூறி வருகிறது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் இவ்வாறே தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.