4/09/2013

| |

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87.
சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்கரெட் தாட்சர் பழமைவாதக் கொள்கைகளை கொண்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியாகவும் இருந்தார்.
பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் ஃபாக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.
1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். புரட்சிகரமான பல பொருளாதாரக் கொள்கைளையும் அவர் முன்னெடுத்தார்.
பெருமளவில் அரச நிறுவனங்களை தாட்சர் தனியார்மயப் படுத்தினார்.
தொழிற்சங்கங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுத்தன் விளைவாக ஒரே நேரத்தில் மிகவும் நேசிக்கப்பட்டும், வெறுக்கப்பட்ட தலைவியாக அவர் திகழ்ந்தார்.
சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.

அஞ்சலிகள்


அவரது மறைவு குறித்து தான் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அவரது குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களை வெளிப்படுத்தி ஒரு தனிப்பட்ட செய்தியை அனுப்பவுள்ளதாக கூறியுள்ளார்.
மார்கரெட் தாட்சர் மறைந்த சில நிமிடங்களிலிலேயே அவரது மறைவு நாட்டுக்கு ஒரு சோகமான நாள் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளார். பலவிதமான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தாட்சர் வெற்றி பெற்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலையமைப்பான ட்விட்டரில் தனது அஞ்சலியை வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மார்கரெட் தாட்சர் அரசியல் களத்தையே மாற்றியமைத்த ஒரு தலைவி என்றும், தனது ஆட்சிக் காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பல முக்கியமான முன்னேற்றங்களைச் செய்தார் என்றும் எழுதியுள்ளார்.
சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்ஹையில் கோர்பஷேவ், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கிஸ்ஸிஞ்சர் ஆகியோரும் தாட்சரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முழு அரசு மரியாதை

சீமாட்டி மார்கரெட் தாட்சருக்கு முழு இராணுவ மரியாதையுடன் கூடிய சம்பிரதாய ரீதியிலான இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவை அடுத்து, பிரிட்டனில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. லண்டனின் புகழ்பெற்ற புனித பால் தேவாலயத்தில் அவருக்கான வழிபாடுகளும் இறுதி நிகழ்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் திரளான மக்கள் அவரது இல்லத்தின் முன் மலர் கொத்துகளையும், வளையங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.