4/22/2013

| |

வட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்பப்படவேண்டும்

வட மாகாணம் தமிழ், சிங்களம், முஸ்லிம்களென மூவின மக்களும் வாழும் மாகாணமாகக் கட்டியெழுப் பப்படவேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்தகைய சூழலை உருவாக்கி அதற்குத் தலைமைத்துவம் வழங்க வேண்டுமென ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்ட அமைச்சர்; அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெலிஓயா மகாவலி வலய மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் வெலிஓயா மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
வெலிஓயா பிரதேச மக்கள் புலிகளின் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள் இப்பகுதி பெளத்த தேரர்களே அவர்களைப் பாதுகாத்தனர். பலர் இறந் தனர். பெருமளவிலானோர் அகதிகளாகினர்.
அக்காலத்தில் நான் புனர்வாழ்வு அமைச்சராக இருந்து மக்களின் துன்பங்களைக் கண்டு முடிந்தளவில் அவர்களுக்கு உதவினேன்.
ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சின் மூலம் இந்த மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது இம்மக்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். இப்பகுதி பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் இதற்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் பிரதேசத்தில் 2000 குடும்பங்கள் உள்ளனர். அவர்களின் குடியிருப்புப் பிரச்சினை இது வரை தீர்க்கப்படவில்லை. காணிப் பிரச்சினைகளும் அவர்களுக்கு உள்ளன. அந்த மக்களைப் பாதுகாப்பதும் அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பு. அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.
சிங்கள மக்களை மட்டுமன்றி மெனிக் பாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தியதுடன் அவர்களுக்கு சகல வசதிகளையும் ஜனாதிபதியவர்கள் பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதேபோன்று வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சகல சிங்கள மக்களையும் மீளக்குடியமர்த்த வேண்டும். வடக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் மாகாணமாக வேண்டும். அதனை நிறைவேற்றி அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும். அதற்கான உச்சளவு ஒத்துழைப்பை வழங்க நாம் தயார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.