4/22/2013

| |

சீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதோடு, 11,500 பேரளவில் காயமடைந்து ள்ளனர்.
எனினும், மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் தொடர்ந்து சிரமத்தை எதிர்நோக்குவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்தங்கிய கிராமப்பகுதிகளை மையம் கொண்டு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 7.01 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் அவசர பணியாளர்கள் நடைபாதையாகவே குறித்த பகுதிகளை அடைந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ள இராணுவத்தினர் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் வாகனங்களிலேயே இரவை கழித்தனர். நிலநடுக்கத்தால் காயமடைந்தோரில் 960 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப் பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துள்ளார். மீட்பு நடவடிக்கையே தமது முதல் இலக்கு என அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் திபத்திய பீடாபூமியின் அடிவாரத்தில் இருக்கும் கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டது போல் காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறியுள்ளது. மற்ற பல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.
கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட முறை பின்னதிர்வுகள் ஏற்பட்டதால் கட்டடத்திற்குள் செல்லாமல் மக்கள் அனைவரும் அச்சத்துடன் சாலையிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர்.
பாதைகள் சேதமடைந்திருப்பதால் அம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு மற்றும் இராணுவ லொறிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் நேற்றைய தினத்தில் வீதியெங்கும் நெரிசலில் சிக்கியிருந்தன.
பொக்சிஸ் பிராந்தியத்தின் லொங்மன் கிராமத்தில் இருக்கும் அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. உடைந்து விழுந்த கட்டடங்களில் பெரும்பாலானவை பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலை கட்டடங்களாகும். இதனையடுத்து உள்ளூர் நிர்வாகம் குறித்து பெரும் அதிருப்தி வெளியாகியுள்ளது.
இதே சிச்சுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, 5 மில்லியன் பேர் தமது வீடுகளை இழந்தனர்.