4/20/2013

| |

சவுதியில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

TMVPசவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பிற்காக சென்று நிர்க்கதியான நிலையில் உள்ள சுமார் 5000 இலங்கையர்களை மீளழைப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கோ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளருக்கு எழுதியுள்ள அவசர மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கீழ்வருமாறு;
சவுதி அரேபியாவில் தமது குடும்ப சூழ்நிலை நிமித்தம் வேலைவாய்ப்பினை தேடிச் சென்ற சுமார் 5000 இலங்கையர்கள் வேலைவாய்ப்பின்றியும் தாய் நாட்டிற்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளுமின்றி அல்லல் பட்டுக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது. இலங்கை நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இக் கடல் கடந்த தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அதிலும் வறுமைக் கோட்டின் கீழ் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் குடும்ப வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் நோக்கோடு கடன் சுமைகளுக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் குறிப்பாக எமது நாட்டு தொழிலாளர்கள் மாதாந்தம் அங்கு சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு அனுப்பினால் மாத்திரமே வாழ்க்கை தரத்தை நடத்தக் கூடிய நிலையில் வேலையில்லாமல் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இவர்களால் பெருந்தொகையான பணத்தை செலவழித்து மீண்டும் நாட்டிற்கு வரக்கூடிய சூழல் பலருக்கு காணப்படாது. அத்தோடு தங்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பயணித்த இவர்களில் பலர் வேலைப் பழுவின் காரணமாக சட்ட திட்டங்களை மீறி வேறு வேலைகளுக்கு சென்றுள்ளதாகவும் இதனால் அவர்களை மீண்டும் நாட்டுக்கு திருப்பி எடுப்பதில் பல பிரச்சினை உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளின் உறவினர்கள் அவர்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இக்கடல் கடந்த தொழிலாளர்களின் நலனிலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் அக்கறை காட்டுவது இலங்கை அரசின் தலையாய கடமையாகும். இவ்வாறு நிர்க்கதியான தொழிலாளர்களுக்கு கைகொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஏனைய தொழிலாளர்களுக்கும் இலங்கை அரசின் மீது நம்பிக்கையும் இலங்கை நாட்டில் ஒரு பற்றும் உண்டாகும் எனவும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே சட்டதிட்டங்களை மீறி குறித்த வேலைப்பழு காரணமாக வேறு வேலைகளுக்கு சென்றிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் ஏனைய அனாதரவற்ற அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் நாட்டிற்கோ அல்லது தகுந்த தொழில் புரிவதற்கோ ஏற்பாடு செய்து கொடுக்கும்படி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  சார்பாகவும் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற ரீதியிலும் தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக நாட்டிற்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுப்பதோடு  வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்ற தாங்கள் இதற்காக துரித நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
என்றும் மக்கள் சேவையிலுள்ள,
பூ.பிரசாந்தன்,
பொதுச்செயலாளர்.