4/16/2013

| |

செங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்! பாடசாலை நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்!- பொதுமக்கள்!

மட்டக்களப்பு, செங்கலடியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு செங்கலடி மத்திய கல்லூரி நிர்வாகத்தினரும் பொறுப்பேற்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.
அண்மையில் செங்கலடியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவி ஒருவரும் மாணவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், மற்றும் முறையற்ற செயற்பாடு தொடர்பாக பாடசாலை நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர் பொதுமக்கள்.
அத்துடன்,  கடந்த பல வருடங்களாக செங்கலடி பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலையை பல்கலைக்கழகம் போல் நடத்தி வருவதாகவும் செங்கலடி மத்திய கல்லூரியில் பல ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டுவந்த போதும் அதனை இன்றுவரை பாடசாலை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்பதோடு தவறு செய்யும் மாணவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை என்கின்றனர்.
இதனால் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் எதையும் செய்யலாம் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தவறுகளை தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் மாணவர்கள் செயற்பட்டுள்ளனர்.
இது குறித்து பல தடவைகள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் எனப் பலபேருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை பாடசாலை அதிபருக்கு சார்பான உயரதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் புகார் கூறியுள்ளனர்.
அத்துடன் செங்கலடி மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் அண்மைக் காலமாக மிகவும் மோசமாகவுள்ளதுடன் பாடசாலையில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை தடுப்பதற்கோ தண்டிப்பதற்கோ பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கவில்லை என்பதுடன் பாடசாலையின் அதிபர் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாடசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பல ஒழுக்கக்கேடான விடயங்களை மூடிமறைத்துள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒரு சுதந்திரமான ஒழுக்கக்கேடான சூழ்நிலை செங்கலடி மத்திய கல்லூரியின் நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சர்வ சாதாரணமாக கைத்தொலைபேசிகளை பாவிப்பதுடன் காதல் விவகாரங்களிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி செயற்பாடுகளின் பின்னணியிலேயே செங்கலடியில் அண்மையில் இடம்பெற்ற கொலையை அக் குடும்பத்தைச் சேர்ந்த செங்கலடி மத்திய கல்லுரி மாணவி ஒரே வகுப்பில் கல்வி பயிலும் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான சூழ்நிலைகளை பாடசாலை உருவாக்கியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
ஒரு கண்டிப்பான ஒழுக்கம் நிறைந்த சூழலில் கல்விகற்று வளர்த்தெடுக்கப்படும் மாணவர்கள் கடைசிவரை இவ்வாறான கொலைக்குற்றங்களுக்கு முயற்சிக்கமாட்டார்கள் என்பதுடன் இது போன்ற கொலைச்சம்பவம் இதுவரை இலங்கையில் நடக்கவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
எனவே மேற்படி மாணவர்களின் கொலைக்குற்றத்திற்கு பாடசாலை நிர்வாகமும் பொறுப்பேற்று சம்மந்தப்பட்டவர்கள் படசாலையை விட்டு விலகவேண்டும் என்பதுடன், கல்வி அமைச்சு மேற்படி பாடசாலை மாணவர்கள் சம்பந்தமாகவும் பாடசாலை நிர்வாகம் சம்பந்தமாகவும் அதிக கவனம் செலுத்தி உடனடியாக ஒரு இறுக்கமான ஒழுக்கம் நிறைந்த சூழலில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.