ஏனைய மதங்களை மதித்து நடப்பதே புத்தபிரானின் தத்துவம் என்றும், பொது பல சேனா அமைப்பின் கொள்கைகள் பௌத்த கொள்கைகளுக்கு முரணானது என்றும் கூறுகின்ற இந்த ஃபேஸ்புக் குழுவினர், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே தாம் பொது பல சேனா அமைப்பின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த நிகழ்வை நடத்த முயற்சித்ததாக கூறுகின்றனர்.ஆனாலும், நிகழ்வு ஆரம்பித்து சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிஸார் தம்மை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டியதாகவும், அவர்கள் தம்மில் சிலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றதாகவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மொஹமட் ஹிஸாம் என்பவர் கூறினார்.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மூலமான அழைப்பு மூலமே தாம் அங்கு கூடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பொலிஸார் தம்மில் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டிருந்த வேளையில் அங்கு சில பிக்குமாரின் தலைமையில் வந்த கும்பல் ஒன்று தமக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தம்மை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனை அடுத்து அந்தக் கும்பலிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிய பொலிஸார், தம்மை அங்கிருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.