3/19/2013

| |

விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானம்

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தினுள் பூரணை, மற்றும் விடுமுறை தினங்களில் முழுமையாக தனியார் கல்வி செயற்பாட்டினை இடை நிறுத்தவும் ஞாயிறு விடுமுறை தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் அறிவித்துள்ளார்.
அதனை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
'இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தினுள் பூரணை, மற்றும்  விடுமுறை தினங்களில் முழுமையாக தனியார் கல்வி செயற்பாட்டினை இடைநிறுத்தவும் ஞாயிறு விடுமுறை தினங்களில் பிற்பகல் 2மணிவரை தனியார் கல்விச் செயற்பாட்டினை இடைநிறுத்தவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு இவ்விதிமுறை அமுல்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இவ் விதிமுறையை மீறி சில தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதால் அறநெறிக் கற்றல் நடவடிக்கைகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் மத அனுஷ்டானங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இச் செயற்பாடானது மாணவர்கள் தமது சமய செயற்பாடுகளில் ஈடுபட இடையூராக அமைவதாக உள்ளது. சகல தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளும் மாணவர்களும் தத்தமது மத அனுஷ்டானத்தில் பங்கு பற்றுவதற்கும், அறநெறி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு தனியார் கல்வி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சமய அனுஷ்டானங்கள் மற்றும் அறநெறிக் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வண்ணம் செயற்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்விதிமுறையை மீறும் பட்சத்தில் பொலிஸார் மூலம் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கமுடியாதது.
மேற்படி தீர்மானத்தினால் விடுமுறை நாட்களில் பொற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் விடுமுறையினை களிக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கப்படுகின்றது என்பது சிறந்த விடயமாகும்' என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.