ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.
இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவேறியதாக ஜெனீவாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இறுதிக் கட்டப்போரின் போது நடந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன.
எனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.
போருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடுமையாக மறுத்துவருகிறது.