இனி நாட்டில் ஹலால் இருக்கக் கூடாது. பொதுபல சேனாவும் ஹலால் குறித்து இனி பேசாது. இலங்கையில் ஒரே சட்டத்தின் கீழ் அனைவரும் வாழ வேண்டும். ஒரு மதத்திற்கு தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் அங்கீகாரங்கள் காணப்படக்கூடாது. எனவே ஹிஜாப் போன்ற விடயங்களில் இருந்து முஸ்லிம் மக்கள் விலக வேண்டும். ஜம் இய்யத்துல் உலமா சபையின் உறுதிமொழியின் பிரகாரம் இலங்கையில் ஹலால் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
இலங்கையில் உலமா சபை அடிப்படை வாதத்தையே வித்திட்டுள்ளது. இந்த அமைப்பின் ஊடாக அடிப்படைவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவுகின்றனர். இவ்வாறான அடிப்படைவாத குழுக்களுடன் அல்கொய்தா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் இலங்கைக்குள் ஊடுருவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்த இரகசிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. ஆகவே, தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் அதன் ஊடாக இலங்கைக்குள் ஊடுருவும் முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் தொடர்பாகவும் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களின் தலைமைப்பீடங்கள் செய்யாத மோசமான அடிப்படைவாத கொள்கையையே உலமா சபை இலங்கையில் பரப்புகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வி பின்வருமாறு :
கேள்வி :- பொதுபலசேனா உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
பதில் :- பௌத்த மதத்தை இழிவு படுத்தவும் அதன் தர்மங்களை கொச்சைப்படுத்தவும் பிக்குகள் என்ற போர்வையில் பல சக்திகள் செயற்பட ஆரம்பித்தன. விஹாரைகளில் போலியான விஷம செயற்பாடுகளும் மேலோங்க ஆரம்பித்தன. இவை குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் மிகவும் தீவிரமாக அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு குழுக்களின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வந்தன. இந்நிலையில் பௌத்த மதம் பல்வேறு வகையில் சிதைக்கப்பட்டு வீழ்ச்சிகளை எதிர்நோக்கியது. இந்நிலையிலேயே பொதுபலசேனா உருவெடுத்து பௌத்த மதத்திற்கு எதிரான சக்திகளை ஒழித்துக்கட்டியது.
அதற்குப்பின்னர் நாட்டில் பாரம்பரிய மதங்களுக்கு சவாலான வகையில் விஸ்தரிக்கப்பட்டு வந்த அடிப்படைவாத சக்திகளின் அடாவடித்தனங்களையும் பொதுபலசேனா தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தது. இந்நிலையில் 30 க்கும் அதிகமான அடிப்படைவாத மத மாற்று அமைப்புகளை நாம் இனங்கண்டு அது குறித்த தகவல்களை பாதுகாப்புத் தரப்பிற்கு வழங்கினோம்.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பௌத்த மதத்திற்கும் அச்சுறுத்தலாக செயற்படும், செயற்பட்டுவரும் அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பில் எமது கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும் அதேவேளை, பொது மக்கள் இது குறித்து தகவல்களை வழங்கவும் முடியும்.
இலங்கையில் நானூறுக்கும் அதிகமான அடிப்படைவாத குழுக்கள் தொடர்பிலும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இக் குழுக்கள் தொடர்பில் பொதுபல சேனா கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
கேள்வி:- அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் முறுகல் நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
பதில்:- இலங்கையில் பாரம்பரியமாக வாழும் முஸ்லிம் மக்களிடையே பிரிவினைவாத நோக்கங்களையும் அடிப்படைவாத கொள்கைகளையும் உலமா சபையே பரப்பி வருகின்றது. சாதாரண முஸ்லிம் மக்கள் உலமா சபையின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. தற்போது முஸ்லிம் மக்களிடையே அடிப்படைவாதத்தை பரப்பி ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையாக வாழவிடாது அநாவசியமான பிரச்சினைகளையே உலமா சபை தோற்றுவித்துள்ளது.
அது மட்டுமன்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளின் அடிப்படைவாத சிந்தனைகள் மற்றும் குழுக்களை உள்நாட்டுக்குள் இந்த உலமா சபையே கொண்டு வருகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் ஷரிஆ சட்டத்தை இலங்கையிலும் பரப்பும் முயற்சியில் அது தனது செயற்பாட்டை விஸ்தரிக்கின்றது. இதனை பௌத்தர்கள் என்ற வகையில் அனுமதிக்க முடியாது. இந் நாட்டில் மூவின மக்களுக்கும் ஒரே சட்டமே இங்கு அமுல்படுத்தப்படுகின்றது. என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம்.
கேள்வி :- ஹலால் விவகாரம் தற்போது முற்றுப்பெற்று விட்டதா?
கேள்வி :- ஹலால் விவகாரம் தற்போது முற்றுப்பெற்று விட்டதா?
பதில் :- இதற்கான பதிலை எம்மால் உறுதிபடக் கூறமுடியாது. ஏனெனில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உலமா சபையை பொதுபல சேனாவோ, முஸ்லிம் மக்களோ அல்லது இந்நாட்டு ஏனைய இனத்தவர்களே நம்பத் தயார் இல்லை. எனினும் மகா சங்க நாயக்கர்களுக்கு உலமா சபை அளித்துள்ள உறுதிமொழியின் பிரகாரம் இனி இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் ஹலால் இருக்கக்கூடாது. பொது பல சேனா ஹலால் குறித்து இனி பேசாது.
ஹலால் விவகாரம் வெறும் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்காக உலமா சபையினால் இலங்கையில் விஸ்தரிக்கப்பட்டதாகும். இதனை முஸ்லிம் மக்களும் விரும்பவில்லை. மறுபுறம் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹலால் சான்றிழ் வழங்கியமை சட்டப்படி குற்றமும் கூட. ஏனெனில் 2005 ஆம் ஆண்டின் இறுதிக்காலப் பகுதியில் தற்காலிகமாகவே ஹலால் சான்றிதழ் வழங்க அப்போதைய அரசாங்கம் அனுமதியளித்தது. அதற்கு பின்னர் அண்மைக்காலம் வரையில் உலமா சபை சட்டவிரோதமான முறையில் நிதி வசூலித்து ஹலால் சான்றிதழ் வழங்கி வந்தது.
இதைத் தவிர முஸ்லிம் மக்களால் நம்பப்படுகின்ற புனித குர்ஆனையும் தூசித்து ஹலால் சான்றிதழை உலமா சபை வழங்கியுள்ளது. இதேவேளை, குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் ஹலாலுக்கு சான்றிதழ் வழங்குமாறு குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்ப படிவத்திற்காக 4000ரூபாவும் முறையே பொருட்களின் வகைகளுக்கு அமைவாக ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா முதல் வருடத்திற்கு பணம் அறவிட்டு உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கியமை தேசிய சட்டத்திற்கும் புனித குர்ஆனிற்கும் முரணானதாகும்.இதற்கு எதிராக அரசாங்கம் உலமா சபை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் ஹலால் சான்றிதழ் வழங்கும் நோக்கில் நிறுவனங்களின் உற்பத்தி இரகசியங்களை பெற்றுக்கொள்வதும் 10 வீதமான முஸ்லிம்களை அந் நிறுவனங்களில் ஊழியர்களாக சேர்த்துக் கொள்ள வலியுறுத்துவதும் உலமா சபையினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு அடிப்படைவாத சூழ்ச்சியாகும். இதனை பெரும் எண்ணிக்கையான வியாபாரிகள் எம்மிடம் முறையிட்டனர். இந்நிலையில் முஸ்லிம் மதத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை எவ்வாறு பௌத்த,இந்து மற்றும் கத்தோலிக்க மதத்தவர்களால் உண்ண முடியும்? இது முறையற்ற விடயம் மட்டுமல்ல, ஏனைய இனத்தவர்களையும் சினம் கொள்ளவைக்கும் செயலாகும். ஆகவே இனி இலங்கையில் ஹலாலுக்கு இடமில்லை.
கேள்வி :- புதிதாக உருவெடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து?
பதில் :- இலங்கையில் எந்தவொரு இனமோ…மதமோ… தமக்குரியதும் தனித்துவமுமான கொள்கைகளை பொது இடங்களில் வெளிக்காட்டுவதை அனுமதிக்க முடியாது. முஸ்லிம் பெண்கள் கறுப்புத் துணியால் ஆள்அடையாளம் அற்றவகையில் போர்த்திக்கொண்டு பொது இடங்களில் நடமாடுகின்றமை மற்றைய இனங்களை தூஷிப்பது போன்று உள்ளது. இவ்வாறான செயற்பாட்டை அவர்கள் தமது வீட்டினுள்ளோ அல்லது வழிபாட்டுத்தலங்களிலோ மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அது மட்டுமன்றி இவ்வாறு கறுப்புத் துணியால் முகம்தெரியாத அளவுக்கு போர்த்திக்கொண்டு செல்லும்போது துப்பாக்கி, குண்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை கடத்தப்படலாம். அதேபோன்று ஆண்கள் இவ்வாறு முழுஅளவில் முஸ்லிம் பெண்களை போன்று மூடிக்கொண்டு கொள்ளை, களவுமற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடலாம். இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இவ்வாறான விடயங்களை முஸ்லிம் இனத்திலுள்ள படித்த புத்திசாலிகள் இதனை சரியான வழியில் எடுத்துக்கூற வேண்டும்.
கேள்வி :- காதி நீதிமன்றம் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் :- நாட்டில் ஒரே சட்டம் ஒரே நீதிமன்றப் பொறிமுறைதான் அமுல்படுத்தப்படுகின்றது.இனத்துக்கு என்றொரு சட்டம் மதத்திற்கு என்றொரு சட்டம் கிடையாது. அனைவரும் நாட்டின் பிரதான சட்டத்திற்கமையவே கட்டுப்பட வேண்டும். இந்நிலையில்,கத்தோலிக்கர்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கொரு சட்டம் என்றால் இந்த நாடு எந்த நிலைக்கு செல்லும்.எனவே காதி நீதிமன்றம் குறித்து அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தேசிய சட்டங்கள் கிடையாதென புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் மத பிரகாரம் ஓர் ஆணுக்கு பல பெண்களை திருமணம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தேசிய சட்டத்துடன் நோக்கும் போது பாரிய தண்டனைக்குரிய குற்றமாக அமைகின்றது. இவ்வாறான விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.
நேர்காணல் : வீ.பிரியதர்சன்
virakesari