* இடம்பெயர்ந்த மக்கள் யாராக இருந்தாலும் பிறப்பிடத்தில் குடியேற உரிமை இருக்கிறது
* தலதா மாளிகை அபிவிருத்தியிலும் பார்க்க மடு தேவாலயத்திற்கு அதிக நிதி
அடம்பனில் அமைச்சர் பசில்
ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு ஒரு கல்லை கூட பெற்றுக்கொடுத்தார்களா என்பதை ஜெனீவாவில் விளங்கப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்றும் சூளுரைத்தார்.
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசுகையில் :- கடந்த 20 வருடங்க ளாக இலங்கையில் வாழும் மக்கள் பயங்கரவாத செயற் பாடுகளினால் பாதிப்புக் குள்ளாகினர். அந்த நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்து சமாதானத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்.
அதனை குறிப்பாக வட மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்ற நிதிகளில் அதிகமானவை வட மாகாணத்தின் அபிவிருத்திக்கே செலவிடப்படு கின்றன. புலிகளினால் வடக்கில் முற்றாக அழித்து துவம்சம் செய்யப்பட்ட பல கட்டடங்களை மீள் புனரமைத்துள்ளோம். பாதைகள் நவீனமயப்படு த்தப்பட்டுள்ளன. மதவாச்சி, தலைமன்னார் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகள் வேகமாக இடம்பெறு கின்றன.
அதேபோல் புத்தளம் மன்னார் ஊடான யாழ்ப்பாண பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நவீன வைத்தியசாலைகள், பிரதேச செயலகக் கட்டடங்கள் மற்றும் தேவையான பாடசாலை கட்டடங்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவைகளெல்லாம் இங்கு வாழும் மக்களுக்காகவே.
இலங்கையில் 80 சதவீதமாக வாழும் பெளத்தர்களால் வழிபடும் தலதா மாளிகையின் நிர்மாணத்துக்கு கூட வழங்கப்படாத நிதிகள் மடு தேவாலய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை உலகில் கத்தோலிக்க மக்களது பிரதான வணக்கத் தலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எமது பிரதான நோக்கமாகும். அதே போன்று தமிழ் மக்களது பிரசித்தம் பெற்ற 5 திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்புக்கு 350 கோடி ரூபா பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எம்மால் முன்னெடுக்கப்படும்
அபிவிருத்தித் திட்டங்களை தடுப்பதற்கும், மக்கள் அதனை அனுபவிக்கக் கூடாது என்ற நோக்கத்தோடும் சர்வதேச புலம் பெயர் சமூகத்திடமும் நாடுகளிடமும் சென்று தமிழ்க் கூட்டமைப்பு பிழையான தகவல் களை வழங்கி வருகின்றது.
மெனிக் பார்ம் நலன்புரி முகாமில் அன்று இடம்பெயர்ந்து தங்கியிருந்த 3 இலட்சம் தமிழ் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் மிகவும் கச்சிதமான முறை யில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவர் ஆற்றிய பணிகள் இந்த வன்னி மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. அதனை மறந்து எவராலும் செயற்பட முடியாது. இந்த அரசாங்கம் அவருக்கு நன்றி கூறுகின்றது.
இன்று அமைச்சர் றிசாத் பற்றி சில ஊடகங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசியல் வாதிகளுக்கு இந்த விமர்சனங்கள் வருவது இயல்பு. அதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. சவால்களுக்கும் தடைகளுக்கும். மத்தியில் தமது பணியினை ஆற்றக் கூடிய தைரியமும் துணிவும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இருக்கின்றது என்பதை நானறிவேன்.
புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் எந்த சமூகத்தை, இனத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் அவர்களது தாயகத்தில் வாழ வேண்டிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
அரசியல் காலங்களில் இங்கு வந்து மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை பிழையாக வழிநடத்தி அதன் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முனையும் இது போன்ற அரசியல் வாதிகள் சமாதானத்தை, இனவுறவை விரும்பும் இம்மக்களை இனக் கூர்களாக பிரித்தாள நினைக்கும் எண்ணங்களை கைவிடுமாறு கேட்கின்றேன்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சமாதானத்தை இல்லாமல் செய்ய எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக இந்த சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றோம்.
அமைச்சர்களான றிசாத் பதியுதீன், தினேஷ் குணவர்தன மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர ஆகியோரும் உரையாற்றினர். முசலி பிரதேச சபைத் தலைவர் தேசமான்ய யஹ்யான், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் என்டன் உட்பட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.