3/30/2013

| |

“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”

-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)
யாழ் வடபகுதியிலிருந்து சுதந்திர இளைஞர் முன்னணி எனும் அமைப்பு இயங்கி வருகின்றது. இவ்வமைப்பின் உறுப்பினர்களான  ஜீவசிங்கம் சிவகுமார்,லட்சுமணன் சுபாஸ்கரன் ஆகியோர்  கடந்த 26 -03-2013 இல் டான் தொலைக்காட்சியில் நிகழ்த்தப்பட்டு வரும்  ‘மறுபக்கம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாம் எதிர் கொள்ளும் சாதிய சமூக ஒடுக்கு முறை குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜ°வசிங்கம்  சிவகுமார் அவர்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர். “இவரை நாம் இச்சபையில் போட்டியிட்டு வெற்றிபெற வைத்ததன் நோக்கம் எமது ஒடுக்கப்பட்டு வரும் சமூகத்தின் (தலித்) மேம்பாட்டிற்கே” எனக் கூறுகிறார்  லட்சுமணன் சுபாஸ்கரன் அவர்கள்.
மேற்படி பிரதேசசபை  உறுப்பினரான  தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவகுமாரன் அவர்கள் சாதிப்பெயர் சொல்லியும் மிகவும் மோசமான வார்த்தைகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினரால் அவமானப் படுத்தப்ட்டிருக்கின்றார். இச்சம்பவமானது 2012 இல் நடைபெற்றது.இது குறித்த செய்தியை நாம் எமது 18வது ‘வடு’ இதழில் சுட்டிக்காட்டியும்  இருக்கின்றோம்.
இச்சம்பவமானது அங்குள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலே  பெரும் அதிருப்தியை ஏற்படத்தியிருந்தது. இச்சம்பவத்திற்காக சம்பந்தப்பட்டதரப்பினர்  மன்னிப்புக்கேக்கவேண்டும் என்ற கோரிக்கையானது தொடர்ந்து ஒருவருடத்திற்கு மேலாக அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து சுபாஸ்கரன் கூறும்போது: “சிவகுமார் அவர்களை  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நாங்களே  பிரதேசசபை உறுப்பினராக தேர்வு செய்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காகவே இவர் முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் கவனத்தில் எடுப்பதில்லை.  இந்த  பிரதேசசபை உறுப்பினர்கள் மத்தியில் சிவகுமாரன் ஒரு தாழ்த்தப்பட்டவர் எனும்  நிலையில் வைத்தே பழகிவருகின்றனர். சிவகுமார் அவர்களை சாதிப் பெயர் சொல்லியும்   இழிவான வார்த்தைப் பிரயோகங்களாலும் தொடர்ந்து  சாடி வருகினறனர்”  என்கிறார் சுபாஸ்கரன் அவர்கள்.
இவர்களது  பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்   அலட்சியப்படுத்தி வந்ததன் காரணமாக  தற்போது இவர்கள்  சுதந்திர இளைஞர் முன்னணி எனும் அமைப்பை ஸ்தாபித்து தலித் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக போராடி வருகின்றனர். 6ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  இளைஞர்கள் தம்முடன் இணைந்து வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாம் தொடந்தும்  பலி ஆடுகளாக இருக்கப்போவதில்லை  நீங்கள் எங்களை தொடந்து வெட்டுவதற்கு.  நாம் சிங்கங்களாக வருகின்றோம் உங்கள் முன்னால்  எனும் சமூக எழுச்சியுடன் சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள தலைப்பட்டுள்ளனர்.
சமூகத்தின் நிலவும் சாதிய ஒடுக்கு முறையை எதிர்கொள்ளத் துணிந்த அந்த இளைஞர்களையும், அவர்களின் ‘சுதந்திர இளைஞர் முன்னணியையும்’ நாம் பாராட்டுவதோடு அவர்களுடன் கரம் கோர்த்து செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம்.
-இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)