3/20/2013

| |

மத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி

இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்கா கொண்டுவந்த வரைவுத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு " நீர்த்துப் போகச் செய்துவிட்டதாகக்" கூறி, திமுக மத்தியில் அமைச்சரவையிலிருந்தும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது.
இன்று சென்னையில் இதை செய்தியாளர்களிடையே அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, வெளியிலிருந்தும் அமைச்சரவைக்கு ஆதரவு தரப்படாது என்று அறிவித்தார்.
ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக கோரிய திருத்தங்களோடு தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தற்போதைய முடிவை திமுக மறுபரீசிலனை செய்யுமா என்று கேட்டதற்கு, அதற்கு நேரம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு விவாதத்துக்கு முதலில் கொண்டுவரட்டும் என்றார்.
திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் கூறினார்.
திமுகவிற்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
திமுகவின் விலகலால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தந்துவரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கட்சிகளான, சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த இரு கட்சிகளும் ஆளும் கூட்டணிக்கு தங்கள் ஆதரவு நீடிப்பதாக அறிவித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
திமுகவின் இந்த விலகலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
திமுகவின் இந்த நடவடிக்கையை " கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் " என்று அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வர்ணித்திருக்கிறார்.
2009ல் போர் நடந்தபோது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த திமுக அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ , ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்ளவோ இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, "மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி" என்று கூறியிருக்கிறார்.