3/08/2013

| |

சுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறுகிறது.
மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள், மக்கள் காணாமல் போகடிக்கப்படுவது, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எழும் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து இந்தத் தீர்மானம் கவலை வெளியிடுகிறது.
மேலும், இலங்கை அரசு, அரசியல் அதிகாரப் பரவலைச் செய்யத் தவறியது உட்பட வெளிப்படையாகக் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அந்த தீர்மான வரைவு கூறுகிறது.
மேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.
இந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது.
மேலும் இலங்கை அரசு, ''ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்'' மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத்தீர்மானம் கோருகிறது.
இத்தீர்மான வரைவு பின்னர் வாக்கெடுப்புக்கு எடுத்துகொள்ளப்படக் கூடும்.
''ஒட்டுமொத்ததில் இது ஒரு பலமான தீர்மானம். கடந்த வருடத்தில் இருந்து இது வாதங்களை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது.'' என்று அம்னஸ்டி இண்டர்நாஷனல் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளது.